விரத நாட்களில் வெங்காயம், பூண்டு ஏன் சாப்பிடுவதில்லை...?!

published 2 years ago

விரத நாட்களில் வெங்காயம், பூண்டு ஏன் சாப்பிடுவதில்லை...?!

 

அமாவாசை, பௌர்ணமி போன்ற விரத நாட்களில் அசைவம் மட்டும் அல்லாது வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, முருங்கைக்காய் போன்ற காய்கறி வகைகளும்  பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன. வெங்காயம், பூண்டு ஆகியவை அத்தியாவசிய பொருட்களாகக் கருதப்பட்டாலும், சுவை உணர்வை மேம்படுத்தினாலும், பல மருத்துவ குணங்களைக் கொண்டிருந்தாலும் விரதத்தின் போது வெங்காயம் மற்றும் பூண்டு ஏன் சாப்பிடுவதில்லை தெரியுமா?

இந்து மதத்தில் உணவு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- ராஜசிக் உணவு
- தாமசிக் உணவு
- சாத்விக் உணவு

இதில் ராஜசிக் உணவு என்பது உடலுக்கு அதிக சக்தியைத் தரக் கூடிய, சூடாக பரிமாறப்படும், அன்றே சமைக்கப்பட்ட உணவைக் குறிக்கும். இவை அசைவ உணவுகளான இறைச்சி, மீன், முட்டை மற்றும் கோழிக்கறி, அனைத்து முளைக்காத பருப்பு வகைகள், மிளகாய், மிளகு போன்ற காரமான மசாலாப் பொருட்கள் மற்றும் வெங்காயம், பூண்டு உட்பட அனைத்து காய்கறிகளும் உள்ளடக்கியது.

தாமசிக் உணவு என்பது உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தக் கூடிய, சக்தியைக் குறைவாகத் தரக்கூடிய அன்றைய நாளில் சமைக்கப்படாத பழைய உணவு ஆகும். இவற்றுள் மீந்த இறைச்சி, மீன், வெங்காயம், பூண்டு, காளான்கள், அதிகம் பழுத்த மற்றும் பழுக்காத பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கும். கூடுதலாக, வினிகர், ரொட்டி, பேஸ்ட்ரிகள், கேக்குகள், சாராயம் போன்ற சில புளிக்கவைக்கப்பட்ட உணவுகளும் தாமசிக் என்று கருதப்படுகின்றன.

சாத்விக் உணவு என்பது பருவகால உணவுகளான சர்க்கரை அதிகம் இல்லாத பழங்கள், முளைக்கட்டிய பருப்புகள், விதைகள், எண்ணெய்கள், பழுத்த காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் இறைச்சி அல்லாத பால், வெண்ணெய் போன்ற புரதங்களை நிறைந்த உணவுகளை உள்ளடக்கும். இவை உடலுக்குச் சக்தியைத் தருவதோடு, செரிமானத்தை எளிதாக்க உதவும் உணவுகள் ஆகும்.  

நம் முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்ற பெரும் சொத்துகளில் ஒன்றாகக் கருதப்படுவதில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளும் ஒன்று. அவ்வாறான ஆயுர்வேதம், விரதத்தின் போது சாத்விக், அதாவது எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை மட்டுமே சாப்பிட அறிவுறுத்துகிறது.

இதன் விளைவாக, உடல் செரிமானத்தை விட உடலின் பாகங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பழுதுபார்ப்பதில் அதிக சக்தியைச் செலவிடுகிறது. இது உடலில் நச்சுத்தன்மையை நீக்கி, புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. கூடுதலாக, சாத்விக் உணவு சருமத்தின் ஆரோக்கியத்தைக் கூட்டி, நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தி, வியாதிகளின் விளைவுகளைக் குறைத்து, மன ஆரோக்கியத்தையும் ஒழுங்குபடுத்துகிறது.

மேலும், ஆன்மிக ஞானம் பெற விரும்புபவர்கள் ராஜசிக் மற்றும் தாமசிக் உணவுகளைப் பொதுவாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் அவை சரீர இச்சைகளைத் தூண்டி, மனச் சோம்பலை அதிகரிக்கின்றன. வெங்காயம் மற்றும் பூண்டு உடலில் வெப்பத்தை உண்டாக்கும் தன்மை கொண்டது. எனவே, விரதத்தின் போது வெங்காயம், பூண்டு போன்ற உணவுகள் தவிர்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe