நாளை -பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத் தினம்' கொண்டாட்டம்

published 2 years ago

நாளை -பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத் தினம்' கொண்டாட்டம்

 

கோவை: செய்தித் துறை அமைச்சர் 2021-2022 ஆம் நிதியாண்டின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில்,  பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்திற்கான  (பிஏபி) பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு மண்டபம்  அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் பொள்ளாச்சியில் செயல்படும்  நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்குப் பாரத ரத்னா "சி. சுப்பிரமணியம் வளாகம்" என்று பெயர் சூட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் "இவ்வளாகத்தில் விவசாயப் பெருமக்களுக்குப் பயிற்சி மற்றும் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய அரங்கு கட்டமைக்கப்படும்.

இவ்வரங்கத்திற்கு "வி. கே. பழனிசாமி அரங்கம்" எனப் பெயர் சூட்டப்படும். மேற்தளத்தில் அமைக்கப்படும் அரங்கத்திற்கு "பொள்ளாச்சி நா. மகாலிங்கம்" பெயர் சூட்டப்படும்.

இம்மண்டபத்தில் பரம்பிக்குளம் ஆழியாறுத் திட்டப்பணிகள் குறித்துப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்படும்.

இவ்வளாகத்தில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. கே. பழனிசாமி கவுண்டர், பாரத ரத்னா சி. சுப்பிரமணியம்,   முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோரைப் பெருமைப்படுத்துகின்ற வகையில் அன்னார்களது முழுத்திருவுருவச் சிலைகள் அமைக்க ரூ. 30 லட்சம் என ஆக மொத்தம் ரூ. 4.30 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்படும்." எனவும் அறிவித்தார்.

இன்றைய இளைய தலைமுறையினர்  நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணரும் பொருட்டு பரம்பிக்குளம் ஆழியாறு  பாசனத்திட்டத்தை அன்றைய இந்தியப் பிரதமர்  நேரு துவக்கிவைத்த நாளான 7. 10. 1961-ஆம் நாளை முன்னிட்டு "பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தினம்"  கொண்டாடப்படும் எனவும், ஆண்டுதோறும் இந்நாளில் அன்னார்களின் திருவுருவச் சிலைகளுக்கு அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

செய்தித்துறை அமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத் தினத்தை முன்னிட்டு  நாளை பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள மஹாராஜா மஹாலில் காலை  9.00 மணிக்கு  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. கே. பழனிச்சாமி கவுண்டர், பாரத ரத்னா சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் பத்மபூஷன் டாக்டர் கே. எல். ராவ் ஆகியோரின் திருவுருவப்படத்திற்குச் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மின்சாரத்  துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அரசின் சார்பில் மலர்த் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில்  பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் பயன்பெறுகின்ற தொகுதிகளின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பாசன சங்கத் தலைவர்கள், பாசன சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe