வெள்ளலூர் குப்பைக்கிடங்கு முழுமையாக அழிக்கப்படும்: அமைச்சர் கே. என். நேரு

published 2 years ago

வெள்ளலூர் குப்பைக்கிடங்கு முழுமையாக அழிக்கப்படும்: அமைச்சர் கே. என். நேரு

கோவை: கோவை மாநகராட்சி நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என் நேரு கூறியதாவது:-
"தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை, குடிநீர் வசதி, குப்பைக் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் பில்லூர் 3வது குடிநீர் திட்டம் ரூ. 750 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது.
அந்த பணி இன்னும் ஓராண்டில் நிறைவு பெற்றுவிடும். சிறுவாணியிலிருந்து 9 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் கோவை மாநகராட்சிக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் 2½ கோடி லிட்டர் மட்டுமே கொடுக்கிறார்கள். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண ஏற்கனவே தமிழக முதலமைச்சர், கேரளா முதல்வர் பினராய் விஜயனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
விரைவில் தமிழக உயர் அதிகாரிகளை அங்கு அனுப்பி வைத்து குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். கோவை மாநகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகளைத் தனியார் நிறுவனத்தினர் வாங்காத நிலையில் எல்லா குப்பைகளும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கைச் சென்றடைந்துள்ளது. அதனை பயோ மைனிங் முறையில் அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 16 ஏக்கரில் குப்பைகள் அழிக்கப்பட்டுள்ளது. 
மீதமுள்ள குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
மேலும் கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க மும்பையிலிருந்து சிறப்பு ஆலை கொண்டுவரப்பட்டு பணிகள் செய்யப்படும். ரூ.591.44 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டம், ரூ.20.50 கோடியில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் செய்யாத பணிகளைச் செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டு கணக்குக் காட்டிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிகளில் ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா ஆனந்தகுமார், எம்.பி சண்முகசுந்தரம், துணைமேயர் வெற்றிச்செல்வன், துணை ஆணையர் சர்மிளா, தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe