கோவை கார் வெடிப்பு சம்பவம்: திருச்சியில் காவல்துறையினர் சோதனை, கைப்பேசிகள் பறிமுதல்

published 2 years ago

கோவை கார் வெடிப்பு சம்பவம்: திருச்சியில் காவல்துறையினர் சோதனை, கைப்பேசிகள் பறிமுதல்

கோவை: கோவையில் கடந்த 23-ஆம் தேதி அதிகாலை கார் வெடி விபத்து நடந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் முதலில் விபத்து என நினைக்கப்பட்ட நிலையில் இது ஒரு கார் வெடி குண்டு என தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி இறந்த நபரின் வீட்டிலிருந்து வெடி பொருட்களுக்கான வேதிப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் 6 பேரைக் கைது செய்து உ. பா சட்டத்தில் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து தமிழக உளவுத்துறை மற்றும் என். ஐ. ஏ அதிகாரிகள் கொடுத்த பட்டியல்கள் அடிப்படையில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருவாரூர், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். நேற்று நெல்லை மேலப்பாளையத்தில் காதர் மூப்பன் தெருவைச் சார்ந்த சாஹிப் முகமது அலி (35), சையது முகமது புகாரி(36) முகமது அலி (38), முகமது இப்ராஹிம் (37) ஆகிய நால்வர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை திருவிழாவில் வெடிகுண்டு வெடித்தது சம்பந்தமாக முகமது அலி, ஒரு இஸ்லாமிய அமைப்பிற்கு ஆன்லைன் மூலம் பணம் வசூலிக்க முயற்சி செய்ததாகவும் அது தொடர்பாக முகமது அலி உள்ளிட்ட நான்கு பேர் வீடுகளில் ஏற்கனவே தேசிய புலனாய்வுக் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் மேலப்பாளையத்தில் உள்ள அந்த நான்கு பேர் வீடுகளிலும் தனித்தனியாகக் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் காவல்துறையினர் அந்த வீட்டிலிருந்த கைப்பேசிகளைப் பறிமுதல் செய்து அந்த கைப்பேசியில் உள்ள எண்கள் அனைத்தையும் தங்களது கணினியில் சேகரித்துக் கொண்டனர்.

இதே போலத் திருச்சி வயர்லெஸ் சாலையில் வசிக்கும் அப்துல் முத்தலிப் என்பவர் வீட்டில், கே. கே. நகர் சரக உதவி ஆணையர் சதீஷ்குமார் தலையிலான காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என். ஐ. ஏ அதிகாரிகள் அப்துல் முத்தலிப் வீட்டில் சோதனை செய்துள்ளதாகவும் அதனடிப்படையில் சந்தேகத்தின் அடிப்படையில் இன்று சோதனை நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையில் கைப்பேசியில் எந்த எந்த நபர்களிடம் பேசியுள்ளார்கள் என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe