மீண்டும் 24 மணி நேர செயல்பாட்டிற்கு வந்த கோவை விமான நிலையம்

published 1 year ago

மீண்டும் 24 மணி நேர செயல்பாட்டிற்கு வந்த கோவை விமான நிலையம்

கோவை: விமான நிலையங்களில் உள்ள ஓடுபாதை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனரமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கோவை சர்வதேச விமான நிலையத்தில் இப்பணிகள் கடந்தாண்டு 2022 ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கின.

தற்போது பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதால் ஷார்ஜா விமானம் தரையிறங்கும், புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- 

"கோவையில் விமான ஓடுபாதை 2.9 கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. புனரமைப்பு பணிகள் மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டன. சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த பணிகள் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பாதிக்கப்பட்டன. 

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் காற்றின் அதிக ஈரப்பதம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் டிசம்பர் மாதத்தில் நிறைவடைய திட்டமிடப்பட்ட பணிகள் தற்போது தான் நிறைவடைந்துள்ளன. 

இதைத் தொடர்ந்து கடந்த 27-ஆம் தேதி முதல் மீண்டும் 24 மணி நேர செயல்பாட்டுக்கு வந்தது கோவை விமான நிலையம். புனரமைப்பு பணிகளால் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்ட ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீண்டும் பழைய நிலைக்கு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் முதல் ஷார்ஜா விமானம் அதிகாலை 4 மணியளவில் கோவையில் தரையிறங்கி மீண்டும் 4.45 மணியளவில் ஷார்ஜா புறப்பட்டு செல்ல தொடங்கியது. சிங்கப்பூர் விமானம் உள்பட சென்னை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகள் முன்பு இரவு 11 மணி வரை மற்றும் அதிகாலை வழங்கப்பட்டு வந்த நிலையில் விரைவில் விமான சேவை நேரங்கள் மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது.

கோடை விடுமுறை காலம் விரைவில் தொடங்க உள்ளதால் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து பல புதிய அறிவுப்புகளை எதிர்பார்க்கலாம்." இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe