பங்குனி உத்திரம் ஏன் கொண்டாடுகிறோம்... அதன் சிறப்பு என்ன...?!

published 1 year ago

பங்குனி உத்திரம் ஏன் கொண்டாடுகிறோம்... அதன் சிறப்பு என்ன...?!

பங்குனி உத்திரம் என்பது தமிழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் இந்து பண்டிகை. பங்குனி உத்திரம் என்பது முருகன், ஐயப்பன், சிவன் மற்றும் விஷ்ணு பக்தர்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இது தமிழ் நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான பங்குனியில் உத்திர நட்சத்திரத்திதை சந்திரன் கடக்கும் நாளாகும். உத்திர நட்சத்திரம் சந்திரனுக்கு உகந்த பௌர்ணமியுடன் இணைந்திருப்பதால் இந்த மாதத்தின் உத்திர நாள் சிறப்பாக கருதப்படுகிறது.

இந்த பௌர்ணமி தினமானது பார்வதி- பரமேஸ்வரர் , முருகன்- தெய்வானை மற்றும் ஆண்டாள்- ரங்கமன்னார் ஆகியோரின் திருமணத்தைக் குறிக்கிறது. பங்குனி உத்திர நாள் அன்று நாராயணன் கோமளவல்லி நாச்சியாரை மணந்து தனது பக்தர்களுக்கு கல்யாண கோல சேவையை வழங்கினார். வால்மீகியின் ராமாயணத்தில் இந்த நாளில் தான் ராமருக்கும் சீதைக்கும் திருமணம் கொண்டாடப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த நாள் கிரஹஸ்த தர்மத்தின் மகிமையை எடுத்துக் காட்டுவதாகும்.

திருப்பதி திருமலையில் உள்ள ஏழு புனித குளங்களில் ஒன்றான தும்புரு தீர்த்தத்தில் பங்குனி உத்திரத்தன்று அனைத்து புனித நீர்களும் சேருவதாகப் பெரிய புராணம் குறிப்பிடுகிறது. இது ஐயப்பனின் ஜெயந்தி நாளும் ஆகும். இந்த நாளில், மகாலட்சுமி தேவி பாற்கடலில் இருந்து பூமியில் அவதரித்தாள் என்பதால் இது மகாலட்சுமி ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று சுப்ரமணியர் கோவில் உள்ள அனைத்து தலங்களிலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக காவடி ஏந்தி வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு அனைத்து முருகன் கோவில்களிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள பூமியின் உருவான பிருத்வி லிங்கத்தை வழிபடுவதில் பங்குனி உத்திர நாள் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில், பார்வதி தேவி கௌரி வடிவில் காஞ்சிபுரத்தில் சிவபெருமானை மணந்தார் என்பதால் இந்த நாள் கௌரி கல்யாண நாளாகவும் கொண்டாடப்படுகிறது. அக்கோவிலில் விழாக்கள் 13 நாட்கள் நடைபெறும்.

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் பௌர்ணமியுடன் இணைந்து வரும் நாள் ஹோலி பண்டிகையாகவும் வசந்தத்தின் வருகையை உணர்த்தும் வண்ணங்களின் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்நாள் வைணவம், சைவம், கௌமாரம் மற்றும் சாக்த சமயத்தினருக்கும் முக்கியமான நாளாகும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe