கோவை: மார்ச் 18, 2023 தேதியின்று அரசு அறிவிப்பில், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981-ன் படி சர்வதேச/ தேசிய உச்சிமாநாடுகள் மற்றும் நிகழ்வுகள் / மாநாடுகள் / கொண்டாட்டங்கள் / திருவிழாக்கள் போன்றவைகளில் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மதுபானம் வைத்திருப்பதற்கும் பருகுவதற்கும் அனுமதி உள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் மது பறிமார மற்றும் உபயோகிக்க, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு செல்லுபடியாகும் சிறப்பு அனுமதி தகுதி சான்று பெற துணை ஆணையர்/ உதவி ஆணையர் (கலால்) மூலம் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியுடன் உரிமக் கட்டணத்தை குறிப்பிட்டபடி செலுத்தி அனுமதி பெற வேண்டும்" என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளத நிலையில், அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது..
பூரண மதுவிலக்கு உறுதியளித்துவிட்டு, 12 மணி நேரம் மதுக்கடைகளை திறந்து வைப்பதுடன், ஆளும் கட்சியான தி.மு.க.-தற்போது திருமண மண்டபங்கள் மற்றும் அரங்கங்களிலும் மது விற்பனை செய்ய அனுமதித்துள்ளதுதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கே.பழனிசாமி கூறியுள்ளார்.
“இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்கி அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ளது தி.மு.க அரசு,” என்றும் குற்றம் சாட்டினார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும், குற்றச்செயல்களை அதிகரிக்கும் இதுபோன்ற மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
"திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒரு போதும் அனுமதியில்லை. சர்வதேச நிகழ்ச்சிகளில் மட்டுமே மதுபானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போன்ற விளையாட்டு போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில் அதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மற்ற மாநிலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி உள்ளது."
திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் அரசை விமர்சித்து, “படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தது தி.மு.க.; ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை இலக்கை அதிகரித்து வருகிறது.” என்றார்.
சாராய ஆலைகளுக்கான அனுமதியை மேம்படுத்துவதில் திமுக அரசு ஆர்வமாக இருப்பதாக குற்றம் சாட்டிய அண்ணாமலை, சமீபத்திய அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார்.
இதேபோன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசுகையில், “தமிழ்நாடு மது (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-ல் செய்யப்பட்டுள்ள திருத்தங்களால், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி ஆபத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது பொதுமக்களின் வாழ்க்கை சம்மந்தப்பட்டது. எனவே, இந்த அறிவிப்பை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” என்றார். இந்த அறிவிப்பை அரசு திருப்பப் பெறவில்லையேல் பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளார்.