பைக் டாக்சிக்கு அனுமதி உண்டா? இல்லையா? கோவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விளக்கம்

published 1 year ago

பைக் டாக்சிக்கு அனுமதி உண்டா? இல்லையா? கோவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விளக்கம்

கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்துக் கழக கோவை கிளை பணிமனையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கோவையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற  பணியாளர்களுக்கு பணப்பலன்களை வழங்கினர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், இன்று கோவையில் 518 பேருக்கு 145.58 கோடி பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளது. 

கோவை, ஈரோடு, திருப்பூர் மண்டலங்களில் நடத்துனர், ஓட்டுநர்களுக்குக் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறைகள் துவக்கி வைத்துள்ளோம். 

மேலும் முதல்கட்டமாக சில பேருந்துகளில் GPS கருவி பொருத்தப்பட்டு அதுவும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகாலத்தில் ஒரு ஓட்டுநர் நடத்துனர் கூட பணிக்கு அமர்த்தப்படவில்லை. 

பிறகு கொரொனா காரணமாக புதிய நடத்துனர் மற்றும் ஓட்டுநரை பணிக்கு எடுக்க இயலாத சூழல் இருந்த நிலையில் தற்போது முதலமைச்சர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை பணிக்கு எடுப்பதற்கான ஆணைகளை வழங்கி உள்ளார். 

அதன்படி முதல் கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பணியில் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது கூடிய விரைவில் மற்ற அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் ஓட்டுனர் நடத்துனரை எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு பேருந்துகளைப் பராமரிப்பதற்கு வழக்கமாக ஒதுக்கப்படுகின்ற நிதி ஒதுக்கப்பட்டு தான் வருகிறது, எந்த ஒரு குறையும் இல்லை.

 கூடுதலாக நிதி ஒதுக்கத் தேவை இருக்கும் பட்சத்தில் முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது செயல்படுத்தப்படும். பஞ்சப்படி உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அதன் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். 2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு மாநில அரசின் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும் அதற்கான டெண்டர்களும் துவங்கப்பட்டுள்ளது. மேலும் KMW வங்கியின் நிதி உதவியுடன் 2400 பேருந்துகள் வாங்குவதற்கு பணிகள் துவங்கியுள்ளது. நான்கில் இருந்து ஆறு மாதத்திற்குள் புதிய பேருந்துகள் நடைமுறைக்கு விடப்படும். 

பைக் டாக்ஸி குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், பைக் என்பது தனி நபர் பயன்படுத்தக்கூடிய வாகனம், அது இன்னும் வாடகைக்கு விடப்படக்கூடிய வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே தமிழ்நாடு அரசைப் பொருத்தவரை அதனைப் பயன்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர் காவல்துறையும் பல்வேறு இடங்களில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 சென்னை மாநகரில் ஆன்லைனில் டிக்கெட் பெறுவதற்கான கருவிகளுக்கு டெண்டர் விடப்பட்டு இறுதிக்கட்டத்தில் உள்ளது கூடிய விரைவில் அது நடைமுறைக்கு வந்த பின்னர் பரிசோதித்து மற்ற இடங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe