கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் தியாகு. இவர் கடந்த 2022-ல் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் டேட்டிங் ஆன்லைன் செயலி மூலம் மர்ம கும்பல் தன்னிடம் ரூஓ 7.84 லட்சம் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.
மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர சைபர் கிரைம் உதவி சரவணகுமார் தலைமையில், ஆய்வாளர் அருண் மற்றும் இரண்டு உதவி ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தியாகு அனுப்பிய வங்கி கணக்கு மற்றும் சில செல்போன் எண்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு அந்த வங்கி கணக்கிற்கு பணம் சென்றதை போலீசார் கண்டறிந்து, சில செல்போன் சிக்னல்கள் மும்பை நகரில் காட்டியதால் தனிப்படை போலீசார் மும்பை சென்று கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
அப்போது மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த 7 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு சிம் கார்டுகள், செல்போன்கள் மற்றும் இணையதளத்திற்கு பயன்படுத்திய ரவுட்டர்கள், பல வங்கி புத்தகங்கள் இருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த அப்சல் ரகுமான் (24), கர்ணன் (24), தமிழரசன் (23), மணிகண்டன் (22) ஜெயசூரிய பாண்டியன் (25), மற்றும் மும்பையை சேர்ந்த விக்னேஷ் வீரமணி (25), விழுப்புரத்தை சேர்ந்த பிரேம்குமார் (33) என்பதும், இதில் அப்சல் ரகுமான் உள்ளிட்ட பொள்ளாச்சியை சேர்ந்த ஐந்து பேரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள், மேலும் இரண்டு பேருடன் சேர்ந்து மும்பையில் தங்கி இந்த மோசடியை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர்.
டேட்டிங் செயலில் மற்றும் இணையதளம் மூலமாக இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்தோடு, சபலத்தில் இருக்கும் ஆண்களுக்கும் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் சில ஆபாச விளம்பரங்களை அனுப்பி உள்ளனர். இவற்றை நம்பி செல்போன் மூலம் அழைக்கும் இளைஞர்களிடம் அவர்களது முழு தகவல்களையும் வாங்கிவிட்டு, போலியான சில படங்களை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை நம்பி ஏமாறுவோரிடம் ரூ.3,000 முதல் ரூ.30 ஆயிரம் வரை மோசடி கும்பலின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் “கால் பாய்ஸ்” தேவை என வரும் விளம்பரங்களை நம்பி செல்போன் மூலமாக அழைக்கும் இளைஞர்களின் ஆதார் கார்டு, புகைப்படம் செல்போன் எண் ஆகிய சில முக்கிய ஆவணங்களை வைத்து அவர்களது பெயரில் போலியான வங்கி கணக்குகளை துவங்கி, அதிலும் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
தமிழக மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இளைஞர்களை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த மோசடியில் அவர்கள் பல லட்ச ரூபாய் வரை பெற்றுள்ளனர். அந்தப் பணத்தை வைத்து கோவா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றும், ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கி உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்கள் மீது வேறு எந்த குற்ற வழக்குகளும் இல்லாத நிலையில், இந்த மோசடியை சுமார் ஒரு வருட காலமாக அரங்கேற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தற்போது கைது செய்யப்பட்ட ஏழு பேரிடமும் 36 சிம்கார்டுகள், 34 செல்போன்கள் மற்றும் 15 வங்கி கணக்கு புத்தகங்கள், இணையதளத்திற்கு பயன்படுத்திய கருவிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சைபர் கிரைம் தனிப்படை போலீசார், ஏழு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
முன்னதாக அவர்களிடம் ஏமார்ந்த நபர்கள் குறித்த முழு விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் உதவி ஆணையர் சரவணகுமார் கூறும்போது : இந்த மாதிரியான வழக்குகளில் புகார் கொடுக்க தயக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் வருவதில்லை, இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய இளைஞர்கள் இம்மாதிரியான மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் உல்லாச வாழ்க்கைக்காக வேறு பணிக்குச் செல்லாமல், செல்போன் செயலி மூலம் மோசடி செய்ய தீர்மானித்து, மோசடி வேலையையே முழு நேரமாக செய்து வந்துள்ளனர். மேலும் அவர்களது 16 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாகவும், அதன் மூலம் சுமார் ரூ.8.6 லட்சம் முடக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சபல ஆண்களை குறி வைத்து அவர்களிடம் சிறுசிறு தொகையை பெற்று மோசடி செய்தால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கமாட்டார்கள் என்பதால் அவர்களை டார்கெட் செய்து தினமும் தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் தமிழில் பேசியும் பிற மாநிலத்தை சேர்ந்த நபர்களிடம் ஆங்கிலத்திலும் பேசியுள்ளனர். இவர்களின் பேச்சை நம்பி சிலர் வேறு இடங்களில் இருந்து கோவைக்கும், பிற பகுதிகளுக்கு சென்று ஏமார்ந்துள்ளது குறிப்பிடதக்கது.