உக்கடம்-ஆத்துப்பாலம் 2ம் கட்ட மேம்பால பணிகள் தீவிரம்

published 1 year ago

உக்கடம்-ஆத்துப்பாலம் 2ம் கட்ட மேம்பால பணிகள் தீவிரம்

கோவை: கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பால பணிகளில் இரண்டாம் கட்ட மேம்பால பணிகளான கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரையிலான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. 

இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது. முதல்கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டது.

உக்கடம்-கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மேலும், உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அதேபோல் உக்கடம் பேருந்து நிலையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளும் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

இதனிடையே, ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் இரண்டாம் கட்ட மேம்பாலம் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணி நீட்டிப்பின் மூலம் ஆத்துப்பாலத்தினை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இறங்கும் வகையிலும், உக்கடம் சந்திப்பில் திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இறங்குதளமும் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பால நீட்டிப்பு மூலம் 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது. உக்கடத்தில் ரூ.233 கோடியில் 1.46 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்கட்ட மேம்பாலம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது.

நொய்யல் ஆற்றில் பில்லர் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் அதனை அடுத்து வரும் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மேம்பால பணிகள் கடந்த 6 மாத காலமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் தொடர்பாக நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளன.


இது குறித்து நெடுஞ்சாலை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் தொடர்பாக பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்த உடன் ஏறுதளம் மற்றும் இறங்குதளங்கள் அமைக்கப்படும். பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் 2 இடங்களில் ஏறு தளமும், 2 இடங்களில் இறங்குத ளமும் 5.50 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படுகிறது’’ என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe