கோவையில் மிளகு மோசடி செய்த தொழிலதிபர் கைது

published 1 year ago

கோவையில் மிளகு மோசடி செய்த தொழிலதிபர் கைது

கோவை : சென்னை வியாபாரியிடம் ஆன்லைன் மூலம் மிளகு வாங்கி ரூ.23.10 லட்சம் மோசடி செய்த கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் உள்பட 2 பேரை காவல்துறை கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்தவர் விஜயபாண்டியன். இவரது மனைவி புவனேஸ்வரி(45). இவர்கள் நாணயம் என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மூலம் மிளகு மொத்த விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு புவனேஸ்வரி நடத்தி வரும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட ஒருவர் தனது பெயர் கவுதமி எனவும் கோவை இடையர் வீதியிலிருந்து பேசுவதாகவும் இங்குத் தனியார் நிறுவனம் நடத்தி வருவதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். 

தொடர்ந்து அவர் 4 டன் மிளகு அனுப்பி வைத்தால் உடனே பணம் கொடுத்து விடுவதாகத் தெரிவித்தார். இதனை நம்பிய புவனேஸ்வரி கேரளாவில் உள்ள ஒரு நிறுவனத்திலிருந்து ரூ.23.10 லட்சம் மதிப்பிலான 1.4 டன் மிளகு வாங்கி பார்சல் சர்வீஸ் மூலம் கவுதமி சொன்ன முகவரிக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பி வைத்தார். 

அதனைக் கோவையைச் சேர்ந்த கவுதமி, மீரான், தாவூத், கரும்புக்கடை பாத்திமா நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் அஜ்மல் கான்(49), ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் கள்ளை ராஜன்(53) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மிளகு வாங்கியதற்கான தொகையை அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்தனர். புவனேஸ்வரி, கவுதமியை தொடர்பு கொண்டு கேட்டபோது மழுப்பலான பதிலைக் கூறினார். மொத்தமாக ரூ. 23.10 லட்சம் மதிப்பிலான 1.4 டன் மிளகு வாங்கி மோசடி செய்து விட்டனர்.

இதுகுறித்து புவனேஸ்வரி கோவை வெறைட்டிஹால் ரோடு காவல்துறை நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் அஜ்மல்கான், ஓட்டல் உரிமையாளர் கள்ளை ராஜன் ஆகிய இருவரைக் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மோசடிக்கு உடந்தையாகச் செயல்பட்ட கவுதமி, மீரான், தாவூத் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe