கோவையில் குனியமுத்தூர் பிள்ளையார்புரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு

published 1 year ago

கோவையில் குனியமுத்தூர் பிள்ளையார்புரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு

 கோவை : நாம் வாழும் வாழ்க்கையில் குடிநீர் மிகவும் இன்றியமையாததாகும். வறுமையில் வாடுபவர்கள் கூட ஒரு நேரம் சாப்பாடு இல்லாவிட்டாலும் தண்ணீரை குடித்தாவது வாழ்ந்து விடுவோம் என்று சொல்வதையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உணவு, பொருள் என எது இல்லை என்றாலும் நம்மால் உலகில் வாழ்ந்து விட முடியும். ஆனால் குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வாழவே முடியாது. 

இது தான் நிதர்சனமான உண்மையாகும். அந்தளவுக்கு மனிதனின் வாழ்க்கையில் குடிநீர் மிகவும் முக்கியமானது என்பது யாராலும் மறுக்க முடியாது. ஒரு காலத்தில் கோவை மாநகர பகுதிகளில் தினமும், புறநகர்ப் பகுதிகளில் வாரம் ஒரு முறையும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக மாநகர பகுதியில் வாரம் ஒரு முறையும், புறநகர்ப் பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒரு முறையும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இப்படி தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதால் மக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாகவே பயன்படுத்தி வருகிறார்கள். சில நேரங்களில் தண்ணீர் முறையாக வருவதும் கிடையாது. இந்த சமயங்களில் மக்கள் படும் இன்னல்கள் ஏராளம். கோவை சுந்தராபுரத்தை அடுத்துள்ளது பிள்ளையார்புரம். மலை மேல் அடுத்தடுத்து நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ள இப்பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

நாகராஜபுரம் வீதி 1, நாகராஜபுரம் வீதி 2, சித்தி விநாயகர் கோவில் வீதி, ராஜீவ்காந்தி நகர், ஸ்ரீ முருகன் நகர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளும் இதில் அடங்கும்.இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இங்குள்ள வீதிகளை உற்று நோக்கும் போது, வீதி ஓரங்களில் ஆங்காங்கே காலி குடங்கள் வரிசைப்படுத்தி அடுக்கி வைத்திருக்கும் காட்சியைக் காண முடிகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- இங்கு வாழும் அனைவரும் அன்றாடம் தினக் கூலி வேலைக்குச் செல்பவர்கள். குடிநீர் எப்போது வந்தாலும், பிடித்து விட்டுத் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஆனால் குடிநீர் எப்போது வருகிறது என்பதே தெரியவில்லை. வரும், வரும் எனக் காத்திருந்து, இலவு காத்த கிளியாகவே நாங்கள் மாறிவிட்டோம். 

மாதத்திற்கு ஒரு முறை தான் எங்களது பகுதிக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. உப்புத் தண்ணீர் 20 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. அதுவும் குழாயில் குடிநீர் குறைந்த அளவே வருகிறது. ஒரு தெருவில் 10 குடிநீர் இணைப்பு இருந்தால், அதில் 5 குடிநீர் குழாயில் மட்டுமே தண்ணீர் வருகிறது.

மீதி 5 குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எத்தனையோ முறை தெரிவித்து விட்டோம். ஆனால் இதுவரை யாரும் செவிசாய்க்கவில்லை. ஒரு சில பகுதிகளில் மாநகராட்சி மூலம் லாரி தண்ணீரை விநியோகம் செய்து வருகின்றனர். 

ஆனால் எங்களுக்கு அந்த வசதியும் செய்து தரவில்லை. கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு வரை இந்த பிரச்சனை கிடையாது. ஆனால் தற்போது தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. சாதாரண பகுதியில் வாழும் பொதுமக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகச் சென்று தண்ணீர் கொண்டு வந்து விடுவார்கள்.ஆனால் மலைமீது வாழ்ந்து வரும் எங்களுக்கு அது கேள்விக்குறியே. இருந்தபோதிலும் நாங்கள் மோட்டார் சைக்கிள், சைக்கிள் உள்ளிட்டவற்றில் 5 கி.மீ தூரம் சென்று தண்ணீரை எடுத்து வருகிறோம்.

நாங்கள் அனைவரும் கட்டிட வேலை மற்றும் கூலி வேலைக்குச் சென்று வருகிறோம். குடிநீர் பிரச்சினை காரணமாக எங்களது வேலைக்கும் செல்ல முடிவதில்லை. தினமும் முழு நேரச் சம்பளம் வாங்க முடியாமல்,குடும்பத்தைக் கழிக்க முடியாமல் மிகவும் திணறி வருகிறோம். 

எனவே இந்த அவல நிலை மாற குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்பது தான் எங்களது ஓரே கோரிக்கையாகும். அப்படி இந்த பிரச்சினைக்கு முடிவு கிடைக்கவில்லையென்றால் ஊரை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்குச் செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe