கோவையில் ஊரை பசுமையாக்க உழைக்கும் ஒரு மனிதி..!

published 1 year ago

கோவையில் ஊரை பசுமையாக்க உழைக்கும் ஒரு மனிதி..!

கோவை : பசுமையின் நடுவே ஒரு பரவசப் பயணம் ,பார்ப்பவை எல்லாம் மனதை மயக்கும் இயற்கை  என்பதை எடுத்து காட்டும் வகையில் கோவையிலுள்ள பெண்மணி குப்பையாக காட்சியளித்த ரிசர்வ் சைட் இடத்தை அழகுக்கே அழகு சேர்க்கும் வகையில் மாற்றியுள்ளார்.

மாறிவரும் காலகட்டத்தில் எல்லாமே செயற்கையாக இருப்பதால், இயற்கையை பாதுகாப்பது என்பது மிகவும் அவசியமானதாக உள்ளது. இயற்கை இறைவனின் பரிசு அதனை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது அனைவரின் கடமையாகும். இதனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், மரக்கன்றுகளை நடவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இயற்கையின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றன.

பூமி தாயின் மடியில் எங்கு நோக்கினாலும் பசுமை என்ற வகையில்,  எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி குப்பை மேடுகளை பூத்துக் குலுங்கும் நந்தவனமாக மாற்றி வருகிறார் கோவையைச் சேர்ந்த பெண்மணி.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி. இவரது மொழியே இயற்கை என்ற வகையில் பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த இவர் இயற்கை இவரை ஈர்க்க, அதன்மீது காதலில் விழுந்த இவர் தான் சார்ந்த பகுதிகள் அனைத்தும் பசுமையாய் காட்டியளிக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் பசுமைப்பரப்பை அதிகரித்திடுவதன் அவசியத்தை உணர்ந்திட வேண்டும் என்ற லட்சியத்தை சத்தமே இல்லாமல் செயல்படுத்தி வருகிறார் இவர்.

இவரது குடியிருப்பைச் சுற்றிலும் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 50 சென்ட் பரப்பளவில் ரிசர்வ் சைட் உள்ளது. பொதுவாக ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் ரிசர்வ் சைட்டுகள் அந்த பகுதி மக்களின் பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டும். அப்படி தேன்மொழியின் இல்லத்திற்கு அருகில் இருந்த ரிசர்வ் சைட் கேட்பாரற்று குப்பைகள் கொட்டும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்தது.

இதனிடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிறுதுளி என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து ரிசர்வ் சைட்டை மீட்ட தேன்மொழி அங்கு பூங்கா அமைத்துள்ளார். இந்த பூங்காவில் மரக்கன்றுகள், பூச்செடிகள், பழ வகைகள் மற்றும் காய்கறி வகைகள் என 275 வகை தாவரங்கள் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டுள்ளன.

ஐந்தினை வகை மரங்கள், அரிய வகை பூச்செடிகள், நட்சத்திர மரக்கன்றுகள், கத்தரி, வெண்டை, பீட்ரூட், தக்காளி, பல்வேறு விதமான மிளகாய் செடிகள் உள்ளிட்ட காய்கறி செடிகளும், பப்பாளி, சப்போட்டா, இலந்தை, கொய்யா, வாழை, ஸ்டார் ஃப்ரூட், முள் சீதா உட்பட ஏராளமான பழ வகை மரங்களும் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த நந்தவனத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், அமர்ந்து படிப்பதற்கான அமைப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேன்மொழி இயற்கை மீது கொண்ட ஆர்வத்தை பார்த்த சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் பலரும் தற்போது இந்த நந்தவனத்தில் தன்னார்வலர்களாக வந்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு வரும் குழந்தைகள் விவசாய முறை குறித்தும் பல்வேறு விதமான செடிகள் குறித்தும் ஆர்வமுடன் அறிந்து கொள்கின்றனர்.

 

வீட்டிற்குள்ளேயே முடங்கி, அருகில் இருப்பவர் பெயர் கூட தெரியாமலும், இவ்வழியாகச் சென்றால் பாதுகாப்பே இல்லை என்றும் அஞ்சிய வயோதிகர்கள் தற்போது சுற்றத்தாருடன் இந்த பூங்காவில் அமர்ந்து அரட்டை நடத்தி வருகின்றனர்.

இப்புவி எங்கும் பூஞ்சோலைகளாக காட்சியளிக்க  50 சென்ட் பரப்பு கொண்ட ஒரு நிலத்தை பூங்காவாக மாற்றி அதன்மூலம் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த தேன்மொழி, கோவையில் இதே போல் பல இடங்களிலும் இயற்கையின் பசுமையை பரப்ப தனது சேவையை மேற்கொண்டு வருகிறார். கோவையில் உள்ள அனைத்துயளிக்க  ரிசர்வ் சைட்டுகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற பூங்காக்களாக மாற்ற வேண்டும் என்ற தனது ஆர்வத்தையும் தெரிவிக்கிறார் இவர்.

இந்த பூமியை அழகாக்கும் பொறுப்பு தேன்மொழி போல நம் அனைவரின் கைகளிலும் உள்ளது. அத்தகைய வகையில் இவர் கோவையை இயற்கையாக மாற்ற  தனி மனிதியாக பூங்கா மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி எங்கு நோக்கினும் பசுமை என்பதை உணர்த்திய இவருக்கும் நம் பாராட்டுக்கள் கூறி இவரது இயற்கை பயணம் தொடர வாழ்த்துவோம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe