கோவையில் உயர் மின் கோபுரம் மாற்றி அமைக்கப்பட உள்ளதால் தென்னை விவசாயம் பாதிப்பு கலெக்டரிடம் மனு

published 1 year ago

கோவையில்  உயர் மின் கோபுரம் மாற்றி அமைக்கப்பட உள்ளதால் தென்னை விவசாயம் பாதிப்பு கலெக்டரிடம் மனு

கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்து வருகின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மனு அளிக்க வந்தனர்.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நவமலை முதல் உடுமலை வரை உள்ள எங்கள் விளை நிலங்கள் வழியாக செல்லும் உயர்மின் கோபுரங்கள், மின் கம்பிகள் மற்றும் உதிரி பாகங்களை மாற்றி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள் மற்றும் மின் வழி தடங்களினால் பெருவாரியான நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் விவசாயிகள் அனைவரும் குறுகிய கால பயிர்களையே சாகுபடி செய்து வந்தனர். இதனால் எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தினால் அன்றைய அரசு பாதிக்கப்பட்ட நிலத்திற்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை. ஆனால் இன்று வன விலங்குகள் விவசாய நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்துவதால் எந்த குறுகிய கால விவசாயமும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். தென்னை விவசாயம் மட்டுமே எங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். எனவே உயர்மின் கோபுரங்கள், உயர்மின் அழுத்த கம்பிகள் செல்லும் விவசாய நிலங்கள் மதிப்பிழந்து காணப்படுகின்றன. 

அந்த மதிப்பிழந்த நிலத்திற்கான இழப்பீட்டையும், மீண்டும் விரிவாக்கம் செய்தால் எங்கள் வாழ்வாதாரமாக விளங்கும் தென்னை விவசாயத்திற்கும், குடியிருப்பு, வீடுகள் பண்ணைகள், பாசன கிணறுகள் ஆழ்துளை கிணறுகள், ஆகியவை அதன் அருகிலேயே அமைந்துள்ளதால் பெரிதும் பாதிக்கப்படும். 

எனவே இந்த பணிகள் துவங்கும் முன்பு ஏற்பட உள்ள இழப்பீட்டினை முறையாக கணக்கிட்டு, தென்னை மரத்தின் காய்ப்பு திறன் பற்றி வேளாண் துறையின் கணக்கீடு அடிப்படையில் சரியான நிவாரணத் தொகை அளிக்க வேண்டும். 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ராஷ்ட்ரிய இந்து மகாசபா:-
ராஷ்ட்ரிய இந்து மகாசபா-வின் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை குண்டுவெடிப்பில் கைதான இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  தமிழக அரசு இந்த விவகாரத்தை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி ஆளுநர் திருப்பி அனுப்பியதாகவும் அறிய முடிகிறது. 

எனவே அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் திட்டமிட்டே சில இஸ்லாமிய அமைப்புகள் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்யக்கூடாது.  இந்த விவகாரத்தை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe