கோவை: உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியம், கணியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், கணியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இக்கிராம சபை கூட்டத்தில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) பஷீர் அகமது, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர் வேலுசாமி, பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பாக செயல்பட்ட ஊராட்சிகளுக்கும், மகளிர் சுயஉதவிக் குழுகளுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். மேலும், 2000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் சுப்பிரமணியை சால்வை அணிவித்து பாராட்டினர். தொடர்ந்து, செல்லப்பபளையம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சி தலைவர் நட்டு வைத்தார்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று நவம்பர் 1ம் தேதி சூலூர் ஊராட்சி ஒன்றியம், கணியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறுகின்றது. கோயம்புத்தூர் மாவட்டம், தொழில்துறைகள் அதிகமுள்ள மாவட்டமாக இருந்து வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இங்கு வேலைவாய்ப்பிற்காக நகரப்பகுதிகள், ஊரகப் பகுதிகளில் குடியிருந்து வருகின்றனர்.
மக்கள் தொகைக்கு தகுந்தவாறு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். அதற்கு அடிப்படை தேவையான குடிநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை அவசியமாகும். இப்பொழுது வசிக்கும் மக்கள் தொகையையும், எதிர்கால மக்கள் தொகையையும் கருத்தில்கொண்டு அதற்கு தகுந்தாற்போன்ற குடிநீர் திட்டங்களை வகுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பை கடைபிடிக்கவேண்டும். தனி வீடு, அடுக்குமாடி வீடுகள், நிறுவன கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து வைத்து, மக்கும் குப்பைகளை உரமாக பயன்படுத்தவேண்டும்.
மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தவேண்டும். திடக்கழிவு மேலாண்மை பணியினை மேற்கொள்வதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். அதேபோன்று தூய்மைப் பணியாளர்களின் பங்கு முக்கியமானது. திடக்கழிவு மேலாண்மையினை மேற்கொள்ளவில்லையென்றால், குப்பைகளால் நிலத்தின் மண் வளம் , நீர்நிலைகள் பாதிக்கப்படும். எனவே, திடக்கழிவு மேலாண்மை பணியினை கவனமாக மேற்கொள்ளவேண்டும்.
மகளிர் சுயஉதவிக்குழுக்களில் உறுப்பினராக இல்லாத மகளிர் இக்குழுக்களில் சேரவேண்டும். இதனால் மானியத்துடன் கூடிய கடனுதவிகள், பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயன்கள் கிடைக்கும். பொருளாதார ரீதியில் உயரவும், தொழில் தொடங்கவும் மிகவும் உதவியாக இருக்கும். வேளாண்மை சேர்ந்த விவசாயிகள் அனைவருமே பயிர் கடன் பெற கிசான் கிரிடிட் கார்டுகளை (KCC Card) வங்கிகளில் பெற்று கொள்ளவேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கடன் அட்டைகள் மூலம் ரூ.1.60 இலட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். திறன் மேம்பாட்டு பயிற்சிகள், வேலைவாய்ப்பு முகாம்கள் மகளிர் திட்டம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றது. பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து பணியாற்றகூடிய வகையில் பல்வேறு தொழில்நிறுவனங்கள் இங்கு உள்ளன. 10வது மற்றும் 12வது முடித்தவர்கள் மேற்கொண்டு படிக்க இயலாமல் வேலைவாய்ப்பு தேடுபவர்கள், ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து, ஓராண்டு, இரண்டாண்டு தொழிற் பயிற்சி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.15000 முதல் ரூ.20000ம் ஊதியத்தில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
10 மற்றும் 12 படித்துவிட்டு சாதாரண வேலைக்கு செல்லும்போது, கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் அவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்று தனியார் நிறுவனத்தில் வேலை செய்யலாம் அல்லது சுயதொழில் புரியலாம். இப்பயிற்சிகள் வழங்க அரசின்சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!