காலமானார் கேப்டன் விஜயகாந்த் : அவர் கடந்து வந்த பாதைகள்!

published 1 year ago

காலமானார் கேப்டன் விஜயகாந்த் : அவர் கடந்து வந்த பாதைகள்!

கோவை: தமிழக மக்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்டு வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு ஏற்பட்ட உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 12ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், கட்சி பொதுக்குழுவில் கலந்து கொண்டார்.

உடல் நிலை மோசமாக உள்ள தங்கள் தலைவரை ஒரு பொம்மை போல் பொதுக்குழுவுக்கு அழைத்து வருவது சரியல்ல என்று தே.மு.தி.க நிர்வாகிகளே ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில் கடந்த 26ம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமாக நடைபெறும் பரிசோதனைக்காகவே  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கட்சி அறிக்கை வெளியிட்டது. இதனிடையே விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.

விஜயகாந்த் கடந்த 1952ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் பிறந்தார். சினிமா துறையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது இயற்பெயர் விஜயராஜ் அழகர்சாமி என்பதை விஜயகாந்த் என்று மாற்றினார்.

படிப்பின் மீது நாட்டம் குறைந்த இவர் தனது பள்ளி படிப்பை 10ம் வகுப்போடு நிறுத்தினார். கடந்த 1979ம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமா துறையில் நுழைந்தார்.

கடந்த 1981ம் ஆண்டு வெளியான தூரத்து இடி முழக்கம் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் முன்னணி நடிகரானார். தனது அதிரடி பாணியின் காரணமாக கேப்டன் என்று அழைக்கப்பட தொடங்கினார்.

கடந்த 2005ம் ஆண்டு தே.மு.தி.க-வை தொடங்கினார். தொடர்ந்து 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு அதிக தொகுதிகளை கைப்பற்றி தமிழக எதிர்க்கட்சி தலைவரானார்.

தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான தி.மு.க-வை பின்னுக்கு தள்ளியது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு நிதி உதவி, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார் விஜயகாந்த்.

கடனில் சிக்கி தவித்த நடிகர் சங்கத்தை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மீட்டார்.

இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது என்ற வகையில் மக்களுக்கு உதவி வந்தார் விஜயகாந்த்.

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் தனது 71 வயதில் காலமானார்.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது நியூஸ் க்ளவுட்ஸ்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe