ஆதினங்களை மிரட்டுகிறது பா.ஜ.- கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கடும் தாக்கு!

published 11 months ago

ஆதினங்களை மிரட்டுகிறது பா.ஜ.- கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கடும் தாக்கு!

கோவை: கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள வி.கே.கே மேனன் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனின் 5 கால மக்கள் பணிகளின் தொகுப்பு குறித்த நூல் வெளியீட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் அ.சௌந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோவையின் மேன்மைக்கான பணிகளில் தோழர் பி.ஆர்.நடராஜன் என்ற நூலை வெளியிட்டனர். 

தொடர்ந்து சௌந்தரராஜன் மற்றும் குணசேகரன் ஆகியோர் பேசும்போது பாஜகவின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது எனவும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட தவறான வரி விதிப்பு நடைமுறைகளால் சிறு குறு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர். மக்களை பிளவுபடுத்தி மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜக ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வாக்களிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். 

 

தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசும் போது, கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த கோவை மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத்தில் ஆதீனங்களை அழைத்து அவர்கள் கையால் செங்கோல் பெற்றுக் கொண்டு பிரதமர் மரியாதை செலுத்தினால், தமிழ்நாட்டில் ஆதீனங்களை மிரட்டி பாஜகவினர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக பி.ஆர். நடராஜன் விமர்சித்தார். 

அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் மீதான அமலாக்கத்துறை வழக்குகளை ரத்து செய்ய 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அமலாக்கத்துறை வழக்குகள் உள்ள 78 நபர்களின் விவரங்கள் இருந்ததாகவும்,  அமலாக்கத்துறை உயரதிகாரிகள் சொல்லாமல், அவர்களது பங்கு அதில் இல்லாமல் ஒரு சாதாரண அதிகாரியால் எப்படி லஞ்சம் கேட்க தைரியம் வரும் எனவும் கேள்வி எழுப்பிய பி.ஆர். நடராஜன், சூழல் இப்படி இருக்க அண்ணாமலை மேடை போட்டு லஞ்சத்தை ஒழிக்கப் போவதாக பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றார். 

கோவையில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கோவையில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்வரும் நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe