கோவை மக்களுக்கு நற்செய்தி; ரூ.20 கோடியில் நவீனமாகிறது உக்கடம் பேருந்து நிலையம்..! ஸ்டாலின் அறிவிப்பு!

published 10 months ago

கோவை மக்களுக்கு நற்செய்தி; ரூ.20 கோடியில் நவீனமாகிறது உக்கடம் பேருந்து நிலையம்..! ஸ்டாலின் அறிவிப்பு!

கோவை: உக்கடம் பேருந்து நிலையம் ரூ.20 கோடி செலவில் நவீன முறையில் சீரமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது. 

முதல்கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பாலப் பணிகளுக்கு ரூ.216 கோடி முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டது.

உக்கடம்-கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 

மேலும், உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 

அதேபோல் உக்கடம் பேருந்து நிலையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளும் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

இதனிடையே, ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் இரண்டாம் கட்ட மேம்பாலம் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேம்பாலப்பணிகள் காரணமாக கோவையின் முக்கிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான உக்கடம் பேருந்து நிலையத்தின் கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. 

இது தான் பேருந்து நிலையமா? என்று கேட்கும் அளவுக்கு,உக்கடம் பேருந்து நிலையத்தின் அமைப்பு மாறியுள்ளது இந்த சூழலில், உக்கடம் பேருந்து நிலையம் குறித்து பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், "உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தால் அகற்றப்பட்ட பேருந்து நிலையம் ரூ.20 கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில் சீரமைக்கப்படும். ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் ஹாக்கி விளையாட்டு தரை அமைக்கப்படும்.  கோவை அரசு மருத்துவமனை கல்லூரியில் மழை நீர் வடிகால், கான்கிரீட் சாலை 10 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் சொன்னபடியே நவீன முறையில் சீரமைக்கப்பட்டால் கோவையில் உள்ள சிறந்த பேருந்து நிலையமாக உக்கடம் பேருந்து நிலையம் மாறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe