கோவை: கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காட்டூர், சிங்காநல்லூர், பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வீடு புகுந்து திருட்டு சம்பவம் நடந்தது.
பூட்டப்பட்ட வீட்டை மட்டும் உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலம் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மிர் மாவட்டம் பினாய் தாலுகாவில் உள்ள பெருகடா பகுதியை சேர்ந்த ரத்தன் (வயது 40) என்பவர்தான் 4 பேர் கொண்ட கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு கோவையில் பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
பிரபல திருடன் கைது
இதையடுத்து ரத்தன் பதுங்கி இருந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த 17 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டான். பின்னர் 2 பேரையும் போலீசார் ரயில் மூலம் கோவை அழைத்து வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கைதான ரத்தன் மீது கோவை மாநகர பகுதியில் 3 வழக்குகளும், காரமடையில் ஒரு திருட்டு வழக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட தென்னிந்தியாவில் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
பலூன் விற்பது போன்று நடித்து நோட்டம்
கைதான ரத்தன், ஒரு பகுதிக்கு செல்லும்போது அங்கு பலூன் விற்பது போன்று நடித்து எந்த வீடுகள் எல்லாம் பூட்டி இருக்கிறது என்று நோட்டம் விடுவான். பின்னர் இரவு நேரத்திலோ அல்லது பகல் நேரத்திலோ அந்த வீட்டுக்குள் தனது கும்பலுடன் புகுந்து நகை, பணத்தை திருடிவிட்டு ரயில் மூலம் உடனடியாக ராஜஸ்தானுக்கு சென்றுவிடுவான்.
அங்கு நகையை விற்று அதில் கிடைக்கும் பணத்தை 4 பேரும் பங்கு போட்டுக்கொள்வார்கள். திருச்சியில் நடந்த திருட்டு தொடர்பாக கைதாகி 1½ ஆண்டு சிறையில் இருந்த ரத்தன் கடந்த சில வாரங்களுக்கு திருச்சி சிறையில் இருந்து வெளியே வந்தான். அதன் பின்னர்தான் அவன் கோவையில் கைவரிசை காட்டி இருக்கிறான்.
தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் அவன் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் இருந்தாலும் வேறு எந்த போலீசாரும் ரத்தனை கைது செய்யவில்லை. எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.