மக்கள் நலனுக்குத் தேவையான முன்னெடுப்புகளைச் சுட்டிக்காட்டவும்; அரசுகளின் நன்மை – தீமை தரும் திட்டங்களைப் பகுப்பாய்வு செய்து விமர்சிக்கவும் பத்திரிகையாளர்கள் விழைகின்றனர்.
அவர்களுக்குப் பத்திரிகை, ஊடக நிறுவனங்கள் களம் அமைத்துத் தருகின்றன.
அதனால் உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் பத்திரிகையாளர்களும், பத்திரிகைகளும், ஊடகங்களும் இன்றியமையாதனவாக உள்ளன. உலக மக்களை இணைக்கின்ற மிகப் பெரிய பாலமாகவும் பத்திரிகையும் ஊடகமும் விளங்குகின்றன.
இன்று (மே 3) உலகம் முழுவதும் பத்திரிகைச் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
பத்திரிகைச் சுதந்திர தினம் ஏன் கொண்டாடப்படுகிறது. அதன் அவசியம் என்ன...?
பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீட்டில் இந்தியா நிலை என்ன... வரலாற்றை மிகச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.
கொலம்பியாவில் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா (GuillermoCano) எல் எஸ்பெக்டடர் (El Espectador) என்ற பத்திரிகையை நடத்தினார். நாட்டின் அரசியலில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் செல்வாக்கு குறித்துத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.
இதனால் 1986ம் ஆண்டு டிச., 17ல் தன் பத்திரிகை நிறுவனத்தின் முன் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பின், எல் எஸ்பெக்டடரின் கட்டிடம் 300 பவுண்டு வெடி பொருட்களால் அழிக்கப்பட்டது. கானோவின் குடும்ப வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டார். கானோவின் வீடும் எரியூட்டப்பட்டது.
கானோவின் கொலை வழக்கை விசாரித்த நீதிபதிகளும் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டனர்.
கானோ கொலையின் கொடூரமும், வழக்கில் நீதி கிடைக்காத அவலமும் பத்திரிகைச் சுதந்திரம் குறித்துப் பேச வேண்டிய அவசியத்தை உலகிற்கு உணர்த்தியது. உலகம் முழுதும் பத்திரிகையாளர்களும் செயல்பாட்டாளர்களும் பத்திரிகையாளர் மீதான தாக்குதலைத் தடுத்து உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
‘பேச்சு, கருத்து, வெளியீட்டுச் சுதந்திரம்; ஊடகச் சுதந்திரத்தின் பாதுகாப்பு,மேம்பாடு ஆகியவற்றிற்கான ஆணை’ என்ற பொருண்மையில் ‘பத்திரிகைச் சுதந்திர சாசனத்தை’ ஆப்பிரிக்கப் பத்திரிகைகள் கூட்டாகத் தயாரித்தன.
அதை 1991ம் ஆண்டு மே 3ல் நடந்த யுனெஸ்கோ பொதுக்கூட்டத்தில் முன்வைத்தன. அதை ஏற்ற யுனெஸ்கோ, பத்திரிகைச் சுதந்திரத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பத்திரிகைச் சுதந்திர தினம் கொண்டாட ஐ.நா.,வுக்குப் பரிந்துரைத்தது.
இதையடுத்து 1993ம் ஆண்டு நடந்த ஐ.நா., பொதுக் கூட்டத்தில், மே 3ம் தேதியை உலகப் பத்திரிகைச் சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆண்டு தோறும் மே 3ம் தேதி பத்திரிகைச் சுதந்திர தினம் முன்னெடுக்கப்படுகிறது.
ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ‘கிலெர்மோ கானோ’ உலக பத்திரிகை சுதந்திர விருதை மே 3ல் யுனெஸ்கோ வழங்கி கவுரவித்தும் வருகிறது.
பத்திரிகைச் சுதந்திர குறியீட்டில் இந்தியா
எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு, பத்திரிகைச் சுதந்திரத்துக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.
அதில், 180 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2016ம் ஆண்டிற்கான பட்டியலில் 133வது இடத்திலிருந்த இந்தியா, 2022ம் ஆண்டு 150வது இடத்திற்கும், 2023ம் ஆண்டு 161வது இடத்திற்கும் சரிந்து வருகிறது.
இந்தியாவில் கௌரி லங்கேஷ் படுகொலை கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது வரை சில பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது தனிமனிதனுக்கு மட்டுமல்ல அரசின் கடமையும் கூட.
இதை...
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்’
என்று திருக்குறள் உணர்த்துகிறது; இதை அரசுகள் உணர்ந்து நடப்பதே நல்லது!