கோவை: சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 2019 தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை விட ஒரு சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 33.52 சதவீதம் பெற்றது. அதுவே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 26.93 சதவீதம் பெற்றது. இதன் வித்தியாசம் 6.59 சாதவிதம் ஆகும். அதாவது திமுகவின் வாக்குகள் 6.59 சதவீதம் சரிந்துள்ளது.
2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 18.80 சதவீதம் ஆகும். தற்போது பாஜக கூட்டணி 18.28 சதவீதம் பெற்றுள்ளது. இதுவும், 0.2 சதவீத சரிவாகும்.
ஆனால், எதிர்கட்சிகளும், ஊடகங்களும் அதிமுக வாக்கு சரிந்தது போல தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். உண்மையில் அதிமுக இந்த தேர்தலில் 1 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் அமைச்சர் சகாக்கள் அந்தத்ந்த தொகுதிகளில் முகாமிட்டு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு வகையில் தேர்தலை முழு பலத்துடன் பயன்படுத்தினார்கள்.
அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த காங்கிரஸின் ராகுல் காந்தி தமிழகத்தில் நடைபயணம் மற்றும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், கொங்கு மக்கள் தேசிய கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவையும் தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்டினர்.
பாஜகவை பொறுத்தவரை பிரதமர் மோடி பலமுறை தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பிரதமர் கோவை மற்றும் சென்னையில் ரோடுஷோ நடத்தினார். மதுரையில் பாஜக தலைவர் ஜே பி நட்டா ரோடுஷோ நடத்தினார்.
ஆனால், அதிமுகவை பொறுத்தவரை கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக தலைவர் பிரேமலதா பிரச்சாரம் செய்தார். அதிமுக தலைவர்களுக்கு இரண்டு மற்றும் மூன்று மாவட்டங்களில் பொறுப்பு வழங்கப்பட்டதால் அவர்களால் அங்கு மட்டுமே பிரச்சாரம் செய்ய முடிந்தது. இருந்தும் அதிமுகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. அதிமுகவிற்கு எந்த விதத்திலும் சரிவு கிடையாது.
கோவையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்ற போதும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றினார்.
எனவே, தமிழக மக்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதிரியும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதிரியும் வாக்களிப்பார்கள். 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையாக வெற்றி பெறும்.
தேசியக் கட்சிகளோடு கூட்டணி வைத்து தான் திமுக இந்த தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் மத்தியில் பாஜகவா, இந்தியா கூட்டணியா என்ற போட்டி தான் இருந்தது.
தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க அதிமுக நடுநிலை வகித்து இந்த தேர்தலை சந்தித்து, ஒரு சதவீத வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் பாஜகவால் எதுவும் சொல்ல முடியவில்லை. இதுவே தேசிய கட்சிகளின் நிலை. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அதிமுக தான் செயல்படுகிறது.
துபாய் தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 50 பேர், அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கான உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டும்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் என்ன வாக்கு சதவீதம் பெற்றுள்ளனர்? அவர்கள் பிரிந்து போன பிறகு அதிமுகவிற்கு ஒரு சதவீத வாக்குகள் அதிகரித்துள்ளது. இதிலிருந்து கட்சி வளமாக உள்ளது என தெரிகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பு குழு குறித்த கேள்விக்கு, ரோட்டில் செல்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை.
கே.சி.பழனிச்சாமி யார்? கட்சியிலேயே அவர் கிடையாது. அவரை பெரிய ஆள் என்று நினைத்து கேள்வி கேட்கிறீர்கள். அவரது கருத்தை தமிழகத்தின் கருத்து போல எடுத்துக் கொள்கிறீர்கள்' என தெரிவித்தார்.