கோவையில் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு!

published 2 weeks ago

கோவையில் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு!

கோவை: கோவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. புதிய உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் அரசு சார்ந்த திட்டங்களை கண்காணிப்பது ஆகிய பணிகளுக்காக பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களின் பதவிக்காலம் கடந்த மே மாதத்துடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய பள்ளி மேலாண்மைக் குழுவை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 31ம் தேதி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஒட்டி கோவையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி நேற்று தேர்தல் நடைபெற்றது.

கோவை தடாகம் சாலை, இடையர்பாளையம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு தேர்தல் நடைபெற்றது.

இதில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் சம்பத், தமிழ்ச்செல்வன், முன்னாள் மாணவர் மருதாசலம், தலைமை ஆசிரியர் அனந்த லட்சுமி ஆகியோர் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த தேர்தலில் பங்கேற்றனர். தேர்தல் முடிவில் தலைவராக ராஜராஜேஸ்வரியும், துணைத் தலைவராக சோனியாவும், தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் 10 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் என 14 உறுப்பினர்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

இந்த மேலாண்மைக் குழு வருகிற 2025-2026ம் கல்வியாண்டு முடிவுறும் வரையிலும் பொறுப்பில் இருக்கும். பள்ளியில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய திட்டங்கள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு, காலை உணவு ஆகிய திட்டங்களை மேற்பார்வையிடுவது, பள்ளியின் தூய்மை மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை, பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்குவது ஆகிய பணிகளில் இந்த மேலாண்மைக் குழு ஈடுபடும்.

இந்நிகழச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe