அன்னபூர்ணா உரிமையாளர் விவகாரம்- வானதி சீனிவாசன் விளக்கம்...

published 5 days ago

அன்னபூர்ணா உரிமையாளர் விவகாரம்- வானதி சீனிவாசன் விளக்கம்...

கோவை: கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 18 வகையான தொழில்புரிபவர்கள் மற்றும் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தினை தமிழக அரசு புறக்கணிப்பதாகவும்,

இத்திட்டத்தை வரும் செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி அன்று அமல்படுத்த வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழக அரசு இத்திட்டம் குலத்தொழில் முறையை நடைமுறைப்படுத்துகிறது என கூறும் விமர்சனத்தை முற்றிலுமாக மறுத்தவர், இத்திட்டத்தின் மூலம் நலிந்த தொழில்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படுவதோடு, நிதி உதவியும் உபகரணங்களும் மத்திய அரசால் வழங்கப்படுவதாகவும், இதனை அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் மட்டும் புறக்கணிப்பதாக தெரிவித்தார்.

இத்திட்டத்தை புறக்கணிப்பதால் தமிழகத்தில் இதில் பதிவு செய்துள்ள பொதுமக்கள் பயன்பெற முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும், குறிப்பாக இத்திட்டத்தில் அதிக அளவில் பெண்கள் பதிவு செய்துள்ளதாகவும், இத்திட்டத்தினை உடனடியாக அமல்படுத்தாவிட்டால் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா அவர்களிடம் பேசி உள்ளதாகவும் வானதி சீனிவாசன் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த இரு நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் குறித்து பேசியவர்,

கோவையில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்தும் வகையில் மத்திய நிதியமைச்சர் பல்வேறு கோரிக்கைகளை அதிகாரிகள் மூலம் கேட்டறிந்துள்ளதாகவும், தொழில்துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொழில்துறையினருடனான சந்திப்பில் ஜிஎஸ்டி குறித்த மாற்று கருத்துக்களை எடுத்துரைத்த அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரம் குறித்து பேசியவர்,

மத்திய நிதியமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்தான் தனிப்பட்ட ரீதியில் கேட்டுக் கொண்டதாகவும், மன்னிப்பு கேட்கும் வீடியோ கட்சியினரின் எதிர்ப்பை காட்டும் வகையில் பகிரப்பட்டதாகவும், இந்த விவகாரத்தை பெரிதாக்காமல் தொழில்துறையினர் மேம்பாடு குறித்து நடத்தப்பட்ட கலந்தாலோசனைகளையும் கருத்துகளையும் மட்டுமே பகிர வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe