தரமான சேவையை ரயில்வே துறை அளித்து வருகிறது- கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி...

published 3 weeks ago

தரமான சேவையை ரயில்வே துறை அளித்து வருகிறது- கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி...

கோவை: கோவை, வடவள்ளி பகுதியில் தனியார் மழலையர் பள்ளியை திறந்து வைத்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் :-

புதிய கல்விக் கொள்கையை ஒட்டி பல்வேறு கல்வி நிலையங்கள் திறக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றும் புதிய திறமைகளை கற்றுக் கொள்ளக் கூடிய இயற்கையான சூழலோடு இணைந்து இருக்கக் கூடிய பள்ளிக் கூடங்கள் காலத்தினுடைய தேவையாக இருக்கிறது என்றும் கூறினார்.

பா.ஜ.க-வின் சித்தாந்தத்தின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் இன்று முதல் துவங்குவதாகவும் இன்று நாக்பூரில் நடைபெற்ற விஜயதசமி நிகழ்வில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  தலைவர் மோகன் பகவத், ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கின்ற கோவில்கள், நீர் நிலைகள், இடுகாடுகள் அனைத்தும் எந்த விதமான வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரும் அந்த இடங்களுக்கு செல்லும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று கூறி இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின்பு, காங்கிரஸ் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் நிலையான ஆட்சியை கொடுக்க முடியாது என்ற சூழலை, அரசியல் ரீதியாக முற்றிலும் மாற்றி அமைத்தது பாரதிய ஜனதா கட்சி என்று கூறிய அவர், அதற்கு உறுதுணையாக இருந்தது வேற்றுமையில் ஒற்றுமை என்ற ஆர்.எஸ்.எஸி-ன் சித்தாந்தம் என்று குறிப்பிட்டார்.

ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு குடும்பத்தின் கட்சியாக கம்பெனியின் ஆட்சியாக மாறிக் கொண்டு இருக்கிற சூழலில், ஜனநாயகத்தை முழுமையாக பின் பற்றக் கூடிய ஒரு அரசியல் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி, தாய் அமைப்போடு இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானம் தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது குறித்து கேள்விக்கு,

இந்த நிகழ்வு அனைவரையும் பதைபதைக்க வைத்ததாகவும் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்பது நிம்மதி அளிப்பதாகவும் கூறிய அவர், இதற்காக பங்காற்றிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

திருவள்ளூர் கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்தான கேள்விக்கு :

ரயில் விபத்துகளை பொருத்த வரை, ஒவ்வொரு நேரத்திலும்  குறிப்பிட்ட காரணங்கள் இருப்பதாகவும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதில்  மத்திய அரசு தீவிரம் காட்டிக் கொண்டு இருப்பதாகவும், கூறினார்.

எளிய பயணிகளுக்கு கட்டணத்தை உயர்த்தாமல், தரமான சேவையை ரயில்வே துறை அளித்து வருவதாகவும், விபத்துகளைப் பொறுத்த வரை மத்திய அரசு எச்சரிக்கையாக கையாளும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து,

மாநில அரசு கோடிக் கணக்கான ரூபாயை செலவழித்து இருப்பதாக கூறுவதாகவும், ஆனால் எந்த இடத்திலும் பருவமழை முன்னேற்பாடுகளை சரியாக இந்த அரசு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இன்றைய அரசு மக்களுடைய துயர்களை புரிந்து கொள்கின்ற அரசாக இல்லை என்றும் கூறினார்.

மழைக் காலங்களில் கோவை லங்கா கார்னரில் மக்கள் சிரமப்படுவதாகவும், இந்த முறை அந்தப் பகுதியில் மழை நீர் நிற்காது என்று உறுதி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், கூறிய அவர், தண்ணீர் நிற்கிறதா? இல்லையா? என்பது மழை வந்தால் தான் தெரியும் என்று கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து தெரிவித்து இருப்பது குறித்து,

அரசியல் கட்சிகள் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது வழக்கமான நடைமுறை என்றும் ஆனால் தி.மு.க தலைவர் மாநிலத்தின் முதல்வரான பின்பும் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல் தவிர்த்து வருவதாகவும் கூறினார். மாநிலத்தின் முதல்வர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்றும், வாழ்த்து சொல்வதில் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது என்றும் கூறினார். விஜய் எல்லா பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பது தங்களின் எதிர்பார்ப்பு என்றும் கூறினார்.

இந்து இயக்கங்களைச் சார்ந்தவர்கள் மீது கொலை மிரட்டல் விடுவது புதிதில்லை என்றும் தமிழகத்திலேயே சித்தாந்தத்திற்காக அதிகமாக உயிரிழப்புகள் நிகழ்ந்து இருப்பது தங்களுடைய இயக்கங்களில் தான் என்றும் கூறிய அவர், எந்த ஒரு தலைவருக்கும் அச்சுறுத்தல் என்று வருகின்ற போது காவல் துறையினர் உரிய கண்காணிப்புடன் அதனை கவனிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe