கோவை: அமைச்சர் பொன்முடி சில நாட்களுக்கு முன்பு பெண்கள் குறித்து பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் பல்வேறு இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் தலைமையில் அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஏ பி முருகானந்தம், அமைச்சர் பொன்முடியின் பேச்சு ஒட்டுமொத்த இந்து மக்களின் மனதையும் புண்படுத்தி இருக்கிறது. திமுக தலைவர்கள் தொடர்ந்து இந்து மதத்தையும் அதனை பின்பற்றுகின்ற முக்கிய நபர்களையும் இழிவு படுத்தி வருகிறார்கள் என தெரிவித்தார்.
குற்றங்கள் அதிகரிப்பதற்கு அமைச்சர் பொன்முடியின் செயல் ஒரு உதாரணம் என விமர்சித்த அவர் எரிமலை என்றாவது ஒருநாள் வெடிக்கும் அந்த சூழ்நிலையை திமுக அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது என தெரிவித்தார். மேலும் அவர்கள் ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதையும் புண்படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என கூறிய அவர் கட்சியில் பொறுப்பு அளவிலிருந்து மட்டும் அவரை நீக்கிவிட்டு அதனை ரசிக்கும் மனிதர்களாக இருப்பதாக விமர்சித்தார்.
மேற்கு வங்கத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எப்படி பெரிய பிரச்சினையாக உருவாகி இருக்கிறதோ அதுபோன்ற நிலைமை தமிழகத்திற்கும் ஏற்படும் என தெரிவித்தார். திக-வினர் தாலியை அறுக்கின்ற விஷயங்களுக்கு தான் கூட்டங்களை நடத்துவார்கள் அவர்களுடன் சேர்ந்து ஏன் இது போன்ற விஷயங்களை பேச வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் பொன்முடியை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். செய்வதை எல்லாம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் எந்த விதத்தில் நியாயமாகும் எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்தியா முழுவதும் இது சம்பந்தமாக புகார்கள் அளிக்க இருப்பதாகவும் தேவைப்பட்டால் நீதிமன்றங்களையும் நடுவோம் என தெரிவித்தார். கார்ட்டூன் மூலம் விமர்சிப்பவர்கள் போன்றவர்களை எல்லாம் கைது செய்யும் பொழுது இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினார்.
அமைச்சர் பொன்முடி திமுகவில் இருக்கக்கூடிய வேறொரு குடும்பத்தினரை குறிப்பிட்டு இதனை கூற வேண்டும் என்று நினைக்கிறாரா என்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், கோவை மாநகரில் பல்வேறு தெருநாய்கள் சுற்றி கொண்டிருப்பதாக குறிப்பிடும் பொழுது ரேபிஸ் தடுப்பூசி நாய்களுக்கு போடும் திட்டம் நேற்றைய தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதற்கு ஏபி முருகானந்தம் அந்த தடுப்பூசியை நாய்களுக்கு போடக்கூடாது வேறு யாருக்காவது தான் போட வேண்டும் அதை நான் யார் என்று சொல்லக்கூடாது என தெரிவித்தார்.
இன்றைய தினம் முத்துராமலிங்க தேவர் இருந்திருக்க வேண்டும், பட்டை அடிப்பவர்கள் நாமும் கொடுப்பவர்கள் அனைவரும் திருநீரை தான் பயன்படுத்துகிறார்கள் அப்படி என்றால் அனைவரையும் தான் அவர்கள் கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள் இதனை சாதாரணமாக கடந்து போய்விட முடியாது என்றார்.