கோவையில் ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்ய முடிவு

published 2 years ago

கோவையில் ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்ய முடிவு

கோவை: கோவையில் ரயில் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இங்குள்ள ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்ய ஆலோசித்து வருவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையம்  நான்கு புறமும் சாலைகளால் சூழப்பட்டுள்ள நிலையில் அங்கு கூடுதல் பாதைகளோ ப்ளாட்பாரங்களோ அமைக்க தடைகள் உள்ளது.

இந்த நிலையில் ரயில் நிலையத்தில் ஏற்படும் இட நெருக்கடியை சரி செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொங்கு ரயில்வே மேம்பாட்டு கவுன்சில் இயக்குநர் கே.எஸ். ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

"கோவை சந்திப்பிலுள்ள ஆறு நடைமேடைகளில் நான்கு மேடைகள் ரயில்களை பல மணிநேரம் நிறுத்த பயன்படுத்தப்படுகிறது. சில ரயில்கள் 17 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்படுகின்றன. மேலும் I மற்றும் II-வது பிளாட்பாரங்கள் மட்டுமே தொடர்ந்து செயல்படுகின்றன.

இந்த ரயில்கள் பொள்ளாச்சி, போத்தனூர் மற்றும் தென் மண்டலத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்படலாம்.

உதாரணமாக, செம்மொழி எக்ஸ்பிரஸ் (16615) கோவை சந்திப்புக்கு அதிகாலை 4.45 மணிக்கு வந்து, 17.5 மணி நேரம் நிறுத்தப்பட்டு, மறுநாள் நள்ளிரவு 12.45 மணிக்கு மன்னார்குடிக்கு புறப்படும்.

இதை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க முடியுமானால் இந்த ரயில் பிற்பகல் 3 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைந்து மறுநாள் காலை 9.30 மணிக்கு கோவை திரும்பும்.

ரேக் ஷாரிங்க் என்று கூறப்படும் முறையின்  அடிப்படையில் ரயில்களை பயன்படுத்தினால் பயணிகள் பயனடையலாம்." என்றார்.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி கூறியதாவது:

"கோவை சந்திப்பில் இருந்து 34 ரயில்களும், மேட்டுப்பாளையத்தில் இருந்து எட்டு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இங்கு ஏற்படும் இட நெருக்கடியைத் தவிர்க்க சில ரயில்களின் சேவைகளை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். ஆனால் 10 மணி நேரம் நிறுத்தப்படும் பெரும்பாலான ரயில்கள், ஈரோட்டில் உள்ள கோச் டிப்போக்கள் மற்றும் இன்ஜின் ஷெட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்கின்றன.

மேலும், மற்ற மாவட்டங்களுக்கு ரயில்கள் நீட்டிக்கப்பட்டால், திரும்பி வருவதில் தாமதம் ஏற்படலாம், எனவே இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்க, தற்போது சேவைகள் நீட்டிக்கப்படவில்லை." என்றார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறுகையில், "கோவை சந்திப்பை விரிவாக்கம் செய்வதில் இடையூறுகள் இருப்பதால், கோயம்புத்தூர் வடக்கு மற்றும் போத்தனூரில் உள்ள ரயில் பாதைகளை மாற்றுப் பாதைகளாக பயன்படுத்துவது குறித்து செவ்வாய்க்கிழமை ரயில்வே அதிகாரிகளிடம் பேசினேன். பாலக்காடு கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ஸ்டேஷன்களை சேலம் கோட்டத்தின் கீழ் சேர்த்து, கோயம்புத்தூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கான சேவைகளை அதிகப்படுத்தவும் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளேன்.

செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் பொள்ளாச்சி, கோவை, மேட்டுப்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அக்டோபர் 3-ம் தேதி 3 ஸ்டேஷன்களிலும் போராட்டம் நடத்தப்படும்." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe