பெட்ரோல் குண்டு வீச்சு, பேருந்துக் கண்ணாடி உடைப்பு : கோவையில் பதற்றமான சூழல்..!

published 2 years ago

பெட்ரோல் குண்டு வீச்சு, பேருந்துக் கண்ணாடி உடைப்பு : கோவையில் பதற்றமான சூழல்..!

 

கோவை: கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் ஒப்பணக்கார வீதியிலுள்ள துணிக்கடையில் மண்ணெண்ணெய்க் குண்டு வீச்சு, இரண்டு அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு எனக் கோவை மாநகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதன் காரணமாகக் கோவை மாநகரில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா குறித்தும் இழிவாகப் பேசியதாகக் கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி நேற்று 3 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் பீளமேடு பகுதியில் பாஜக-வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு உருவபொம்மை எரித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த மூவரைத்  NIA அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையிலிருந்து பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியாவின் தேசியச் செயற்குழு உறுப்பினர் ஏ. எஸ் இஸ்மாயில் அழைத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று காலை அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ். டி. பி. ஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் கரும்பு கடை பகுதியில் தடுப்புகளைத் தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

இதனிடைய நேற்று மாலை கணபதியிலிருந்து கோவைப்புதூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அதேபோன்று காந்திபுரத்திலிருந்து நரசிபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, டவுன்ஹால் பகுதியைக் கடந்து சென்ற போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கல் வீசியதில் அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில் கோவை வி. கே. கே மேனன் சாலையில் அமைந்துள்ள கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி எறிந்தனர். அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு வெடிக்காத நிலையில் இது தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போன்று கோவை ஒப்பணக்கார வீதி பகுதியில் செயல்பட்டு வரும் மாருதி டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடையின் மீது மர்ம நபர்கள் திரியுடன் மண்ணெண்ணெய் வீசிச் சென்றனர். இது தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வெரைட்டி ஹால் ரோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து கோவை மாநகர் முழுவதும் சுமார் 2000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, கடந்த சில நாட்களாகக் கோவையில் விடுதிகளில் தங்கி உள்ளவர்களின் பின்னணி குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாநகர் முழுவதும்  கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe