பல்லடத்தில் கடத்தல் நாடகம் போட்டு வீடியோ வெளியிட்ட பெண் கைது

published 2 years ago

பல்லடத்தில் கடத்தல் நாடகம் போட்டு வீடியோ வெளியிட்ட பெண் கைது

 

கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரவீணா. சேகர் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருகிறார். பிரவீணா பல்லடத்தில் அழகு நிலையம் நடத்தி வந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரவீனாவின் தாய் பிலோமீனாள் பல்லடம் போலீசில் தனது மகளை 2 நாட்களாகக் காணவில்லை புகார் அளித்தார். அவரைக் கண்டுபிடித்துத் தருமாறுக் கூறியிருந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரவீனாவைத் தேடி வந்த நிலையில் பிரவீணா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வந்தது. 

அந்த வீடியோ பதிவில், "எனது அழகு நிலையத்திற்கு வந்த பல்லடம் வேலப்பக்கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் (38) என்பவர் டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் எனச் சொல்லி எனது பெயரில் உள்ள வீட்டுப் பத்திரத்தை வாங்கி வங்கியில் அடைமானம் வைத்து ரூ.75 லட்சம் கடன் வாங்கினார். வீட்டுப் பத்திரம் ஏலத்திற்கு வந்த நிலையில் பணத்தைத் திருப்பி கேட்டபோது தொழில் விஷயமாக வெளியூர் அழைத்துச் சென்று திருச்சி பகுதியில் தன்னை அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார். மேலும் எனது தாய், தந்தைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்திவிட்டார். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். அவர் தினமும் என்னைச் சித்ரவதை செய்கிறார்" எனக் கண்ணீர் மல்கக் கூறியிருந்தார். 

இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ பல்லடம் காவல்துறைக்கும் கிடைத்தது. வீடியோவிலிருந்த ஆதாரங்களைத் திரட்டிக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீடியோவில் பிரவீணா திருச்சியில் இருப்பதாகக் கூறியதால் அங்கும் தனிப்படை விரைந்தது.

தொடர்ந்து அவரைத் தேடி வந்த நிலையில், பிரவீணா ஈரோட்டிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் இருப்பதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் வந்தது. அதன் பேரில் காவல்துறையினர் ஈரோட்டுக்குச் சென்று பிரவீணா இருப்பதாகக் கூறிய வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அப்போது காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பிரவீணா வீடியோவில் தன்னைக் கடத்தியதாகக் கூறிய சிவக்குமாரும், அவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இதனால் இருவரும் சேர்ந்து இந்த செயலில் திட்டமிட்டு ஈடுபட்டு இருப்பதைத் தெரிந்து கொண்ட காவல்துறையினர் அவர்களைப் பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு வைத்து விசாரணை நடத்தியதில் 2 பேரும் கணவன், மனைவி போல நடித்து கோவையைச் சேர்ந்த தொழில் அதிபரிடம் மோசடியில் ஈடுபட்டத் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. காவல்துறையின் தொடர் விசாரணையில், பிரவீனாவுக்கும், சிவக்குமாருக்கும் பழக்கம் இருந்துள்ளது என்றும் அவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த தொழில் அதிபரான குமரேசன் என்பவருடன் நட்பு ஏற்பட்டதில், பிரவீணா, சிவக்குமார் மற்றும் அவரது நண்பர் தமிழரசு ஆகியோர் குமரேசனிடம், அவரைத் தொழிலில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வதாகவும், வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகவும் கூறி அவரிடமிருந்த சொத்து ஆவணங்களை வாங்கியது தெரிய வந்தது.

அந்த ஆவணங்களை ஈரோடு பகுதியிலுள்ள அரசு வங்கியில் வைத்து ரூ.2 கோடி கடன் பெற்றனர் என்பதும் அதில் குமரேசனுக்கு எந்தவித பங்கும் கொடுக்கவில்லை, டெக்ஸ்டைல்ஸ் தொழிலும் செய்யவில்லை என்றும் தெரிந்தது. 

இதனால் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படித் தொடர்ந்து குமரேசன் கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் எந்தவித பதிலும் கூறாமல் இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் வங்கியிலிருந்து கடன் பெற்ற தொகைக்கு அசலும், வட்டியும் கட்டச்சொல்லி குமரேசனுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வந்துள்ளது. இதையடுத்து குமரேசன் மீண்டும் சிவக்குமார், பிரவீணா ஆகியோரைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் முறையாகப் பதில் அளிக்கவில்லை. 

இதையடுத்து அவர்கள் மீது குமரேசன் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சிவக்குமார், பிரவீனாவுக்கு தெரியாமல் அவரது சொத்துப் பத்திரங்களை வைத்து கடன் பெற முயன்றது தெரியவந்தது. 

இதனால் இந்த வழக்கிலிருந்தும், சிவக்குமாரிடம் இருந்தும் தப்பிப்பதற்காகப் பிரவீணா யோசித்துள்ளார். அப்போது அவர் தன்னை சிவக்குமார் கடத்தி விட்டதாகக் கூறினால் இதிலிருந்து தப்பித்து விடலாம் என நினைத்தார். அதன்படி பிரவீணா, தன்னை சிவக்குமார் கடத்திவைத்து சித்ரவதை செய்வதாக நாடகமாடி சமூக வலைத்தளங்களில் வீடியோவை பரப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்துக் காவல்துறையினர் பிரவீணா மற்றும் சிவக்குமாரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தமிழரசு என்பவரையும் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe