கொரோனா பாதிப்பிற்குப் பின் கோவை விமான நிலையத்தில் சரக்குகளைக் கையாளும் அளவு அதிகரிப்பு...!

published 2 years ago

கொரோனா பாதிப்பிற்குப் பின் கோவை விமான நிலையத்தில் சரக்குகளைக் கையாளும் அளவு அதிகரிப்பு...!

 

கோவை: கொரோனாவால் துவண்டு போயிருந்த கோவை விமான நிலையத்தில் மீண்டும் சரக்குகள் கையாளும் எடை அளவு 900 டன்னை கடந்துள்ளது.

கோவை விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சர்வதேச விமான வசதி இல்லாத நாடுகளுக்கும் கூட 'பாண்டட் டிரக்' சேவை மூலம் சரக்குப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்கறிகள், பழங்கள், பூ, மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள், வார்ப்படம், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து விமானச் சேவை மற்றும் சரக்கு போக்குவரத்து மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மாதாந்திர சரக்கு கையாளும் அளவு 900 டன்  எடையைக் கடந்துள்ளது.

இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறியதாவது:
"கோவை விமான நிலையத்திலுள்ள ஒருங்கிணைந்த சரக்கக வளாகத்தில் கொரோனாத் தொற்றுப் பரவலுக்கு முன்னர் மாதந்தோறும் உள்நாட்டுப் போக்குவரத்துப் பிரிவில் 800 டன் மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்து பிரிவில் 200 அல்லது 250 டன் எடையிலான சரக்குகள் கையாளப்படுவது வழக்கம்.

கொரோனாப் பரவலால் சரக்குப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது விமான பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மாதந்தோறும் 600 முதல் 800 டன் எடையிலான சரக்குகள் கையாளப்பட்டன.

செப்டம்பரில் உள்நாட்டுப் போக்குவரத்து பிரிவில் 790 டன், வெளிநாட்டுப் போக்குவரத்து பிரிவில் 141 டன் என மொத்தம் 931 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. தற்போது 2 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே மாதத்தில் கையாளப்பட்ட மொத்த சரக்குகளின் எடையளவு 900 டன் எடை அளவை கடந்துள்ளது."

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe