கவனத்தைத் திசை திருப்பி கொள்ளையடிக்கும் கும்பல் கைது: ரூ.14.01 லட்சம் பறிமுதல்

published 2 years ago

கவனத்தைத் திசை திருப்பி கொள்ளையடிக்கும்  கும்பல் கைது: ரூ.14.01 லட்சம்  பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த எட்வின் ஜோசப் என்பவர் கடந்த மாதம் 26ம் தேதி  தனக்குச் சொந்தமான இந்நோவா காரில் கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரின் காரை ஓவர்டேக் செய்த டூவீலரில் வந்த மர்ம நபர் ஒருவர் காரின் டயர் பஞ்சராகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய எட்வின் ஜோசப்பும், அவரது டிரைவரும் காரை நிறுத்தி விட்டு காரின் டயரை சோதனையிட்டுக் கொண்டிருக்கும் போது  கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த மூவர்  கும்பல் எட்வின் ஜோசப்பின் காரில் வைத்திருந்த ரூ.6.90 லட்சம் ரொக்கப்பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அவர் மேட்டுப்பாளையம் போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் எஸ்.பி.பத்ரி நாராயணன் உத்தரவின்படி டி.எஸ்.பி பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்  சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் பழைய குற்றவாளிகளை ஆய்வு செய்ததில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தனிப்படையினர் கர்நாடகா மாநிலம், சிமோகா மாவட்டம் பத்ராவதிக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் கவனத்தைத் திசை திருப்பிக் கொள்ளையடித்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ், சங்கர், அஜய்பாபு, நந்து உள்ளிட்ட நால்வரையும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பேருந்து நிலையம் அருகே வைத்து  தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர், அவர்களை மேட்டுப்பாளையம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் கிடிக்குப்பிடி விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடும்பமாக விடுதியில் தங்கி அருகிலுள்ள பணப்புழக்கம் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நோட்டமிட்டு திருடும் கும்பல் என்பதும், கைது செய்யப்பட்ட நால்வரும் மேட்டுப்பாளையம் பாரி கம்பெனி ரோட்டைச் சேர்ந்த அயூப் கான் என்பவரின் கவனத்தைத் திசை திருப்பி டூவீலரில் வைக்கப்பட்ட ரூ.1.43 லட்சம், காரமடையில் சிகரெட் வியாபாரியிடம் ரூ.1.52 லட்சம், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரூ.2.96 லட்சம், சேலம் மாவட்டம் ஆத்தூரில் பெண்ணிடம் ரூ.1.20 லட்சம் என பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும், இதேபோல் சேலம், திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களிலும் தொடர்பிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும், இச்சம்பவங்களில் ஈடுபடும்பொழுது மாட்டிக்கொள்வதை தவிர்ப்பதர்காக கைப்பேசி உபயோகிப்பதில்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நால்வரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.14.01 லட்சம் ரொக்கப் பணத்தினையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கவனத்தைத் திசை திருப்பி கொள்ளையடிக்கும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நால்வர் மேட்டுப்பாளையம் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe