தமிழகத்தில் மேலும் குறைந்தது பஞ்சு விலை: ஒரு கேண்டி ரூ.64,500-க்கு விற்பனை- 5 மாதங்களில் ரூ.35,500 குறைந்தது

published 2 years ago

தமிழகத்தில் மேலும் குறைந்தது பஞ்சு விலை: ஒரு கேண்டி ரூ.64,500-க்கு விற்பனை- 5 மாதங்களில் ரூ.35,500 குறைந்தது

கோவை: பஞ்சை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு செயல்படும் ஜவுளித் தொழிலில் நாடு முழுவதும் 1.10 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். முக்கியத்துவம் பெற்றுள்ள ஜவுளித்தொழில் பஞ்சு விலை உயர்வு காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

வரலாற்றில் முதல் முறையாகக் கடந்த மே மாதத்தில் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு ரூ.1 லட்சத்தைக் கடந்தது. பஞ்சு விலை உயர்வால் நாடு முழுவதும் ஜவுளி சங்கிலித்தொடரிலுள்ள அனைத்து தொழில்களையும் கடுமையாகப் பாதித்தது.

தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரியை அக்டோபர் 31-ஆம் தேதி வரை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் பெரிய நூற்பாலைகள் வெளிநாடுகளிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்யத் தொடங்கினர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து குறைந்து வந்த பஞ்சு விலை தற்போது ஒரு கேண்டி ரூ.64,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 மாதங்களில் ரூ.35 ஆயிரம் வரை குறைந்துள்ளதால் வெளிநாடுகளிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்த நூற்பாலைகள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து தென்னிந்திய மில்கள் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பினர் கூறியதாவது:-
"பஞ்சு விலை தற்போது ஒரு கேண்டி ரூ.64,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே மாதத்தில் இந்தியாவில் ஒரு கேண்டி பஞ்சு ரூ.1 லட்சத்தைக் கடந்த காரணத்தால், பெரிய நூற்பாலை நிர்வாகத்தினர் வெளிநாடுகளிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்யத் தொடங்கினர்.

ஆனால் பஞ்சு விலை எதிர்பார்த்ததை விட அதிகமாகக் குறைந்து வருகிறது. அக்டோபர் 16-ஆம் தேதி ஒரு கேண்டி ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 23-ஆம் தேதி ஒரு கேண்டி ரூ.68 ஆயிரமாகக் குறைந்தது. இந்த மாதம் ரூ.64,500-ஆகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 5 மாதங்களில் மட்டும் பஞ்சு விலை ஒரு கேண்டிக்கு ரூ.35,500 குறைந்துள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்த மற்றும் பஞ்சு வருகைக்காக புக்கிங் செய்து காத்திருக்கும் நூற்பாலை நிர்வாகத்தினர் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கப்பல்களில் பஞ்சு ஏற்றிக் கொண்டு வரக் கொள்கலன்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட கப்பல் போக்கு வரத்தில் உள்ள பிரச்சனைகள் காரணமாக வெளிநாட்டுப் பஞ்சு இந்தியா வந்து சேருவதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பஞ்சு விலை தாறுமாறாக அதிகரிப்பதும், மீண்டும் வேகமாகக் குறைந்து வருவதும் பல கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe