கோவையில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை சேகரிக்க அறிவுறுத்தல்

published 2 years ago

கோவையில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை சேகரிக்க அறிவுறுத்தல்

கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, மாநகரில் கண்காணிப்புப் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை போலீசார் சேகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

மாநகரில் பல லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். வாடகைக்கு குடியிருப்போர் பல்வேறு முகவரிகளில் மாறி மாறி குடியிருக்கும் நிலை உள்ளது. அசம்பாவிதங்கள் நிகழும்போது, தொடர்புடையவர்களை உடனடியாக கண்டறியவும், முழுமையான விசாரணைக்கும் அவர்களை பற்றிய விவரங்கள் தேவை.

எனவே வாடகைக்கு குடியிருப்பவர்களின் பெயர்,  ஆதார், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வீடுகளின் உரிமையாளர்கள் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து அந்தந்த போலீஸ் நிலையங்கள் வாரியாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

வீடுகளில் குடியிருப்பவர்கள் மாறிவிட்டாலும், அந்த வீடுகளுக்கு வேறு யார் குடிவந்திருந்தாலும் அந்த விவரங்களையும் தங்கள் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று  கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் புதிதாக பணிக்கு சேரும் தொழிலாளர்களிடம் ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என வேலை வழங்குவோருக்கு தொழில் அமைப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

புதிதாக தொழிலாளர்களை பணியில் சேர்க்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க தொழில்முனைவோருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அவர்களிடம் ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe