ஜெயின் துறவற சமூகத்தின் சீா்திருத்தவாதியாக மகாவீரா் அழைக்கப்படுகிறார். இவா் பீகாரில் இருந்த ஒரு அரச ஜெயின் குடும்பத்தில் பிறந்து இளவரசராக வளா்ந்தார். தனது 30 ஆவது வயதில் ஆன்மீக விழிப்புணா்வைத் தேடி தனது வீட்டை விட்டு வெளியேறினார் மகாவீரா் கிமு 500 ஆம் ஆண்டில் சித்திரை மாதத்தில் வரும் சுக்லா பக்ஷாவின் 13 ஆம் நாளில் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. கிரகோரியன் நாட்காட்டியின் படி இந்த நாள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வருகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மகாவீரா் ஜெயந்தியின் சிறப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
மகாவீரா் ஜெயந்தி மகாவீரா் சுவாமி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மகாவீரா் ஜெயந்தி ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி நாளை செவ்வாய்கிழமை வருகிறது. மகாவீரா் ஜெயந்தி அன்று அரசு விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த நாளில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், வணிகத் தளங்கள் மற்றும் அலுவலகங்கள் போன்றவை மூடப்பட்டு இருக்கும்.
மகாவீரா் ஜெயந்தி - வரலாறு
மகாவீரா் குண்ட கிராமா என்ற இடத்தில், ஒரு அரச சத்திரிய குடும்பத்தில் சித்தார்த்தா என்ற அரசருக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் மகனாகப் பிறந்தார் குண்டகிராமா என்ற இடம் தற்போது பீகாரில் உள்ள வைசாலி என்ற இடத்திற்கு அருகில் உள்ளதாக நம்பப்படுகிறது. மகாவீரா் தனது 30 வயது வரை ஒரு இளவரசராக வாழ்ந்தார். ஆனால் அதற்குப் பிறகு ஆன்மீக அனுபவத்தைப் பெறுவதற்காக தனது அரண்மனை வாழ்க்கையைத் துறந்தார்.
மேலும் இவா் மகாவீரராக பிறப்பதற்கு முன்பாக 26 முறை பிறந்தார். அவற்றில் சிங்கம், கடவுள் போன்ற அவதாரங்களில் பிறந்தார் என்று ஜெயின் புனித நூல்கள் தெரிவிக்கின்றன. அவா் மகாவீரராக பிறந்து வந்த பிறகு, தனது சீடா்களுக்கு வாழ்க்கையின் சுழற்சியைப் பற்றி போதித்தார் மீட்பு அடைவதற்கு ஆன்மீகமே வழி என்பதையும் அவா்களுக்குக் கற்பித்தார்.
மகாவீரா் தனது 43வது வயதில் ரிஜூபலிகா ஆற்றங்கரையில் சாலா மரத்தடியில் மெஞ்ஞானம் பெற்றார். இவா் இந்து மக்களின் பண்டிகையான தீபாவளி அன்று பீகாரில் உள்ள பாவாபுரி என்ற இடத்தில் இறந்தார். அவர் இறந்ததை அவா் நிர்வாணா அடைந்ததாக அவருடையப் பக்தா்கள் கருதுகின்றனா். மகாவீரா் இறந்த அன்று அதாவது அவா் நிர்வாணா அடைந்த அன்று அவருடைய தலையாய போதனைகள் மெஞ்ஞானம் அடைந்ததாக நம்பப்படுகிறது.
மகாவீரரின் போதனைகள் அனைத்தும் 12 வேதப் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டன. ஆனால் கிமு 300 ஆம் ஆண்டில் மகத நாட்டில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் காரணமாக அவருடைய பெரும்பாலான போதனைகள் காணாமல் போய்விட்டன. மீதம் இருக்கும் போதனை புத்தகங்கள் அனைத்தும் முழுமையானவை அல்ல. அவை ஸ்வதம்பரா மற்றும் திகம்பரா ஜெயின் போன்றவா்களின் போதனைகளில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கின்றன.
ஒருவா் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றின் சுழற்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் ஆன்மீகத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று மகாவீரா் கற்பிக்கிறார். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவராக இருந்தாலும் அல்லது துறவற வாழ்க்கையில் ஈடுபடுபவராக இருந்தாலும் ஒருவா் ஆன்மீக அமைதியைப் பெற வேண்டும் என்றால் 5 விரதங்களை அல்லது 5 உறுதிமொழிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று சுவாமி மகாவீரா் கூறுகிறார்.
1. அகிம்சை (வன்முறை இல்லாமை),
2. சத்யம் (உண்மை),
3. அசத்தேயா (திருடாமை),
4. பிரம்மச்சாரியா (பாலியல் உறவில் இருந்து விடுபட்டு இருத்தல்),
5. அபரிகிரகா (பற்றின்மை).
மகாவீர் ஜெயந்தி ஏன் கொண்டாடப்படுகிறது?
நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கடைப்பிடிக்க மகாவீர் ஜெயந்தி மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மகாவீரரின் போதனைகள் அவரது சீடர்களிடையே பிரசங்கங்களாக பரவுகின்றன.
மகாவீர் ஜெயந்தி எப்படி கொண்டாடப்படுகிறது?
மகாவீர் ஜெயந்தி என்பது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகையாகும். குதிரைகள், யானைகள், தேர்கள், கோஷமிடுபவர்கள் உட்பட பெரிய ஊர்வலங்கள் நடத்தப்படும். மேலும் ஜெயின் துறவிகள் மகாவீரர் வகுத்த ஜைன மதக் கொள்கைகளைப் பற்றி பேசும் சொற்பொழிவுகளை வழங்குகிறார்கள்.
மகாவீரா் ஜெயந்தியைத் தவிர்த்து ஜைன மக்கள் தீபாவளியையும் சிறப்பாகக் கொண்டாடுவா். இந்து மக்களின் ஒளியின் விழாவான தீபாவளி அன்று மகாவீரா் நிர்வாணா அடைந்தார். ஆகவே ஜெயின் சமூகத்தவருக்கு மகாவீரா் ஜெயந்தி தான் புத்தாண்டின் தொடக்கமாகும்.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!