கோவை மக்களே 15 நாட்களுக்கு பிறகு சிறுவாணி தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்..!

published 1 year ago

கோவை மக்களே 15 நாட்களுக்கு பிறகு சிறுவாணி தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்..!


கோவை: கோவை சிறுவாணி அணை வறண்டுவிட்டது. வெறும் அரை அடி என்கிற அளவிற்கு மொத்தமாக வறண்டு போய் உள்ளது. இப்போது உள்ள குடிநீரை வைத்து 15 நாள்கள் மட்டுமே விநியோகம் செய்ய முடியும்.
கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியார் திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை தற்போது மிகவும் வறண்டு காணப்படுகிறது.
தமிழ்நாட்டின் குடிநீர் தேவைக்காக தான் கேரளாவில் சிறுவாணி அணை கட்டப்பட்டது. இந்த அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 1956இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது சிறுவாணி அணை கேரளா வசம் சென்றுவிட்டது. ஆனால் அதனை பயன்படுத்தும் உரிமை தமிழ்நாட்டிற்கு தான் உள்ளது.
கிட்டத்தட்ட முல்லை பெரியாறு அணை மாதிரி தான். அணை இருப்பது கேரளாவில் என்றாலும், அதை பயன்படுத்தும் உரிமை தமிழ்நாட்டிற்கு இருக்கிறது. சிறுவாணி அணையை பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அணை பராமரிப்புக்கான கட்டனத்தை தமிழ்நாடு அரசு கேரள அரசுக்கு செலுத்தி வருகிறது.

இந்த சிறுவாணி அணையிலிருந்து பெறப்படும் குடிநீர் கோவை மாநகராட்சியின் ஒரு பகுதிக்கும் பயன்படுகிறது. அத்துடன்7 நகராட்சிகளுக்கும், 28 ஊராட்சிகளுக்கும் சிறுவாணி அணையின் நீர் குடிநீருக்காக மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. பாசனத்திற்காக பயன்படுத்தப்படுவது இல்லை.
சிறுவாணி அணையில் பொதுவாக 878.5 மீட்டர் கொள்ளளவில் தண்ணீரை பராமரிக்க வேண்டும். ஆனால் கேரள அரசு 877 மீட்டர் அளவில் தான் தண்ணீரை பராமரிக்கிறது. அதற்கு மேல் பராமரிக்க அனுமதிப்பது இல்லை. இதனால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 122 மெட்ரிக் கன அடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறை தான் வெயில் காலங்களில் கோவைக்கு சிறுவாணி தண்ணீர் கிடைக்காமல் போக காரணமாக இருக்கிறது.
பொதுவாக சிறுவாணி அணையில் கேரளா 45 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்க அனுமதிக்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் சிறுவாணி அணையின் நீர் மட்டம் சரசரவென சரிந்தது. இப்போது உள்ள தண்ணீர் அளவு வெறும் அரை அடி என்கிற அளவில் உள்ளது.

தற்போது சிறுவாணிஅணையின் நீர்த்தேக்கப்பகுதிகள் வறண்டு பாளம் பாளமாக வெடித்துள்ளது. சிறுவாணி அணையில் தண்ணீர் இல்லாமல் கட்டாந்தரை ஆகி வருகிறது. அங்கு கோவை மாநகராட்சிக்காக அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் கிணற்றில் மொத்தம் நான்கு வால்வுகள் இருக்கிறது. அவற்றில் மூன்று வால்வுகள், தண்ணீர் மட்டத்துக்கு மேலே தெரிகின்றன. நான்காவது கடைசி வால்வின் வழியாக, தற்போது தண்ணீர் எடுக்கப்படுகிறது.
நாளொன்றுக்கு 3.3 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கின்றனர். இதே நிலையில் வறட்சியும் தொடர்ந்தால், சிறுவாணி அணையில் இருக்கும் மொத்த தண்ணீரும், இன்னும் 15 நாட்களில் காலியாகி விடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை இன்னமும் எட்டிப்பார்க்கவில்லை. அணையை ஒட்டிய பகுதிகளில் லேசானா சாரல் மழை தான் கடந்த சில நாட்களில் பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை அடுத்த சில நாட்களில் வெளுத்து வாங்கி கனமழை பெய்தால் தான் கோவைக்கு குடிநீருக்கு சிக்கல் இருக்காது. மாறாக கனமழை பெய்யாவிட்டால், கோவைக்கும் அதனை சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது கடினமாகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe