"கரண்ட் பில்" ரீடிங் இனி வீடுகளுக்கு சென்று எடுக்க வேண்டாமா? ஸ்மார்ட் மீட்டர் அறிமுகம்.!

published 1 year ago

"கரண்ட் பில்" ரீடிங் இனி வீடுகளுக்கு சென்று எடுக்க வேண்டாமா? ஸ்மார்ட் மீட்டர் அறிமுகம்.!

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், கரண்ட் பில் கணக்கீட்டில் புது மாறுதல் துவங்கப்படுகிறது. இதற்கான முன்னெடுப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) கையில் எடுத்து வருகிறது.. என்ன அது?

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது... இப்போது, அதாவது இந்த ஜூலை முதல், பணவீக்கத்தைக் கணக்கிட்டுக் கட்டணத்தை உயர்த்தும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மின்கட்டணம்:ஆனால், வீடுகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு தரப்பட்டுள்ளது... எனினும், தொழில் நிறுவனங்களுக்கு கட்டணம் உயரும்போது அது மறைமுகமாக எல்லாவற்றின் விலைவாசியிலும் எதிரொலிக்கவே செய்யும்.. இந்த மின் கட்டண உயர்வானது, அப்பார்ட்மென்ட்களில் பொதுப்பயன்பாட்டிற்கான மின் இணைப்பு கட்டணத்துக்கும் இந்த உயர்வு பொருந்தும் என்பதால், மக்கள் வெகுவாகவே அதிருப்திக்கு உள்ளாகி உள்ளார்கள்.

இந்நிலையில்தான், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழக அரசு வேகப்படுத்தி உள்ளது.. மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாக சமீபத்தில் நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.. இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் "ஸ்மார்ட்' மீட்டர்" திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு: ஸ்மார்ட் மீட்டர் என்றால் என்ன? இந்த திட்டத்தின் கீழ் மீட்டரில் மின் பயன்பாடு தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.. பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக "சர்வர்" உடன் இணைக்கப்படும். இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட்' மீட்டர் கணக்கெடுத்துவிடும். அதுவும் துல்லியமாக மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் . அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்க வேண்டியதில்லை.. அதற்கான கட்டண விவரம் sms மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும்.

வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் போன் கூட செய்ய தேவையில்லை. அதை மின்வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்ள முடியும். இது போன்றவற்றை ஸ்மார்ட் மீட்டர் மூலமாக கிடைக்கும் நன்மைகளாகும்.வரும் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து வீடு, வணிக இடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.. அந்தவகையில், கடந்த மாதம், முதல்கட்டமாக 9 மாவட்டங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த சர்வதேச டெண்டரையும் அரசு கோரியிருந்தது.

ஸ்மார்ட் மீட்டர்கள்: இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணியை விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு வசதியாக இது மூன்று தனித்தனி தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.. 

அதன்படி, முதல் தொகுப்பானது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், தர்மபுரி மற்றும் பிற வட மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களை உள்ளடக்கியது. சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை தி.நகரில் 1.1 லட்சம் மீட்டர்களை டாங்கெட்கோ ஏற்கனவே நிறுவியிருக்கிறது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 2 தொகுப்புகள்: அதேபோல, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, கரூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மின்வாரியங்களுக்கு 2 தொகுப்புகள் ஏற்கனவே, முடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய மூன்றாவது தொகுப்புக்கான டெண்டர் விரைவில் ஆரம்பமாக போவதாக சொல்கிறார்கள்..

 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், இந்த ஆண்டடே தொடங்கப்பட்டு, வரும் மார்ச் 2025க்குள் முடிக்கப்பட உள்ளதாக காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புது புரட்சி: ஆனால், கரண்ட்பில்லில் மாறுபாடுகள் தொடர்ந்து வருவதால், இந்த மீட்டர் பொருத்தும்பணியை விரைவில் துவங்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் கிளம்பி உள்ளன. ஸ்மார்ட் மீட்டர்கள் அறிமுகமாவது, தமிழகத்தில் எரிசக்தி துறையில் புரட்சியை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாகவும் நம்பப்பட்டு வருகிறது.





 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe