கோவை: டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை வந்தடைந்த எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
'நேற்றைய தினம் பாரதப் பிரதமர் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்களுடைய கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இந்தக் கூட்டம் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு போட்டியாக நடத்தப்பட்டது என கூறுகின்றனர். அது முற்றிலும் தவறு. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் கூட்டம் என்பது ஏற்கனவே தேதி அறிவிக்கப்பட்டு, திட்டமிட்டு நடத்தப்பட்டது. இதில் தலைவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை என்பது ஏற்கனவே பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு ஆகும். தகவலின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதுவே தாமதமான நடவடிக்கை தான்.அதிமுகவை பொருத்தவரை ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஏற்கனவே இருக்கின்ற உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கின்ற பணி நடைபெறும்.
தற்போது அந்த பணி சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு கோடியே 75 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எங்களுடைய இலக்கு இரண்டு கோடி. அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
இரண்டு வருடமாக புறக்கணிக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து தான் முதலமைச்சர் மகளிர் உதவி தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு கொடுத்தார்.
நான்கு மாதம் ஆகிவிட்டது இன்னும் கணக்கெடுக்கும் பணி கூட முடியவில்லை. பல நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் இந்த நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கப்படும் என்பதுதான் திமுக தலைவர் கூறியது.
யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் பிற துறைகள் துறைகள் கிடைக்கப் பெற்ற ஆதாரத்தின் அடிப்படையில் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகிறது.தமிழகத்தில் பாஜக அதிக இடங்களில் போட்டியிடும் என்பது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக சொல்லக்கூடிய கருத்து.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தான் தலைமை தாங்கும். 2019 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தபோதும் தேசிய ஜனநாயக கூட்டணி தேசிய அளவில் தலைமை தாங்கியது, தமிழகத்தில் அதிமுக தலைமை தாங்கியது. 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் போட்டியிட்டது. அது தொடரும்.
இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் என்றால் திமுக தான். கருணாநிதி ஆட்சியில் ஆலடி அருணா குற்றம் சுமத்தப்பட்டு உடனடியாக பதவி பறிக்கப்பட்டது. இதுதான் தமிழகத்தின் வரலாறு. இன்றைக்கு இருக்கக்கூடிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பயந்து போய் குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர்களை சந்திக்கிறார்கள்.
ஆறுதல் சொல்வதற்காக போகவில்லை ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் பதற்றத்தில் போகிறார்கள்.மது விலைகள் உயர்த்தப்பட்டது குறித்த கேள்விக்கு, குடிக்கிற பழக்கம் எனக்கு இல்லை மதுபான விலை உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேட்க வேண்டும்.
கோவை சரக டிஐஜி தற்கொலை விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு இப்படிப்பட்ட நிலைமை என்றால் சாதாரணமானவர்களுக்கு என்ன நிலைமை என்பதை எண்ணி பார்க்க வேண்டும். தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் என்று கூறுகிறார்கள். அதற்காக 20 நாளாக இறப்பதற்கு முன்பு சிகிச்சை பெற்று வருவதாக சொன்னார்கள்.
அப்படி இருந்தவருக்கு மீண்டும் பணி அமர்த்தி, ஏன் மன அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும்.கோயம்புத்தூர் மாவட்டம்
ஸ்பின்னிங் மில் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி. கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைகள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி. இப்போது ஜவுளி தொழில் நலி வடைந்த சூழலில் உள்ளது. ஜவுளித்துறை கூட்டமைப்புகள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி உள்ளனர்.
பஞ்ச மற்றும் இதர கழிவு பஞ்சின் விலை குறைக்காமல் விற்கப்படுகிறது. அதனை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தொழிற்சாலைக்கான மின்சார கட்டணம் பெரும் சுமையாக உருவாகியுள்ளதாக கூறியுள்ளனர். எனவே, மின்சார துறை அதற்கான தீர்வுகளை காண வேண்டும்.
இந்த தொழிலில் லட்சக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.' என தெரிவித்தார்.