இந்தியாவின் வருங்கால ஃபாஸ்ட் பவுலர்: இளம் வீரருக்குப் பாராட்டு..!

published 1 year ago

இந்தியாவின் வருங்கால ஃபாஸ்ட் பவுலர்: இளம் வீரருக்குப் பாராட்டு..!

சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் வலது கை பவுலர்களை விட இடது வேகப்பந்து வீச்சாளர்கள் வெற்றிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள்.

அந்த வரிசையில் இந்திய வரலாற்றில் ஜாம்பவான் ஜஹீர் கானுக்கு பின் தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர்களைத் தேடி அலைந்த இந்தியாவுக்கு இர்பான் பதான் போன்ற சிலர் நம்பிக்கை கொடுத்தாலும் நீண்ட காலம் அசத்தாமல் வெளியேறினார்கள். இருப்பினும் அந்த தேடலில் தற்சமயத்தில் இளம் வீரர் அர்ஷிதீப் சிங் வருங்காலத்தில் அசத்தக்கூடிய நம்பிக்கை நட்சத்திரமாக முன்னேறி வருகிறார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அவர் 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கமாக இருந்து 2019 முதல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார். அதில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய அவர் கடந்த 2022 சீசனில் 14 போட்டிகளில் 10 விக்கெட்களை வெறும் 7.70 என்ற எக்கனாமியில் எடுத்து டெத் ஓவர்களில் அசத்தினர். அதன் காரணத்தால் இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் உம்ரான் மாலிக் போல வந்த வேகத்திலேயே வெளியேறாமல் நல்ல லைன், லென்த் போன்றவற்றைப் பின்பற்றிச் சிறப்பாகச் செயல்பட்டு ஓரளவு நிலையான இடத்தை பிடித்ததால் காயமடைந்த பும்ராவுக்கு பதிலாக 2022 ஆசியக் கோப்பையில் தேர்வானார்.

 அதில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேட்ச் தவறவிட்டாலும் பந்து வீச்சில் சிறப்பாகவே செயல்பட்ட அவர் 2022 டி20 உலகக் கோப்பையிலும் தேர்வாகி அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்தார். அதனால் ஜாம்பவான் வாசிம் அக்ரம் போல ஸ்விங் செய்வதாகவும் ஜஹீர் கான் இடத்தை இந்திய அணியில் நிரப்புவதற்கு வந்துள்ளதாகவும் அவரை பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் பாராட்டியிருந்தார். அதே போல வருங்காலத்தில் அசத்தும் அளவுக்கு அர்ஷிதீப் சிங்கிடம் நல்ல திறமை இருப்பதாக வாசிம் அக்ரம், ஜான்டி ரோட்ஸ் போன்ற ஜாம்பவான்களும் பாராட்டினார்கள்.

அதனால் ரசிகர்களும் மகிழ்ந்த நிலையில் கடந்த ஜனவரியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் நோ-பால்களைப் போட்டுத் தள்ளிய அவர் மோசமான உலக சாதனை படைத்த பின்னடைவைச் சந்தித்தார். அதே போல 2023 ஐபிஎல் தொடரிலும் 14 போட்டிகளில் 17 விக்கெட்களை எடுத்த அவர் 9.70 என்ற சற்று சுமாரான எக்கனாமியில் பந்து வீசியதால் 2023 உலகக் கோப்பை உத்தேச கிரிக்கெட் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். ஆனாலும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தேர்வாகியுள்ள அவர் தற்சமயத்தில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.

ஆனால் பும்ரா, ஷமி, சிராஜ், பாண்டியா என அனைவருமே வலது கை பவுலர்களாக இருக்கும் நிலையில் அவரை குறைந்தபட்சம் பேக்-அப் வீரராகக் கூட உலகக்கோப்பைக்குத் தேர்வு செய்யாமல் தேர்வுக்குழு தவறு செய்து விட்டதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2022 ஆசியக் கோப்பையில் ஏற்கனவே பாராட்டியதை போல வருங்காலங்களில் நீண்ட காலம் சிறப்பாகச் செயல்படும் அளவுக்கு அர்ஷிதீப் சிங்கிடம் நல்ல திறமை இருப்பதாக மீண்டும் பாராட்டியுள்ள வாசிம் அக்ரம் அவரை சரியாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே சமயம் நல்ல ஸ்விங் செய்யும் திறமையைக் கொண்டுள்ள அர்ஷிதீப் இன்னும் சற்று வேகத்தை அதிகரிக்க அதிகமான உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டுமென ஆலோசனை தெரிவிக்கும் அவர் இது பற்றி  பேசியது, “நான் அவரை ஏற்கனவே பார்த்துள்ளேன். வருங்காலத்தில் அசத்தக்கூடிய நல்ல வீரராக இருக்கும் அவர் நீண்ட காலம் விளையாட வேண்டும் என்பதைக் கடந்த ஆசியக் கோப்பையிலேயே நான் தெரிவித்திருந்தேன்"

"அவரிடம் நல்ல ஸ்விங் இருக்கிறது. ஆனாலும் சற்று குறைவாக வேகத்தில் வீசும் அவர் அதை உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடி அதிகரிக்க வேண்டும். இளம் வீரராக இருக்கும் அவர் தற்போது பந்து வீசும் விதத்தை விரும்புகிறார். எனவே அதிகமாக விளையாட விளையாடத் தசைகள் வளரும் என்பதால் வரும் காலங்களில் இன்னும் அவரால் வேகமாகப் பந்து வீச முடியும்" என்று கூறினார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe