கோவையில் அமரன் திரைப்படம் பார்க்க திரண்டு வந்த இந்து மக்கள் கட்சியினர்- SDPI, மே17 இயக்கத்திற்கு எதிராக முழக்கம்...

published 2 months ago

கோவையில் அமரன் திரைப்படம் பார்க்க திரண்டு வந்த இந்து மக்கள் கட்சியினர்- SDPI, மே17 இயக்கத்திற்கு எதிராக முழக்கம்...

கோவை: இந்திய ராணுவ வீரர் முகுந்த் வாழ்க்கை வரலாறு குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் அமரன்.

இத்திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாகவும் கூறி எஸ்டிபிஐ கட்சியினர் தமிழகம் முழுவதும் இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ள பல்வேறு திரையரங்குகள் முன்பு திரண்டு படத்தை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கிற்கு இந்து மக்கள் கட்சியினர் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இந்த படத்தை காண்பதற்கு வருகை புரிந்தனர். மேலும் இந்த படத்தை காண வந்த ஒரு சில பொதுமக்களுக்கு டிக்கெட்டுகளை இலவசமாக வாங்கி கொடுத்தனர். தொடர்ந்து திரையரங்கு முன்பு கூடிய அர்ஜுன் சம்பத் உட்பட 20க்கும் மேற்பட்டோர் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாகவும் எஸ்டிபிஐ, மே 17 இயக்கத்தை தடை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத், இந்த படத்தின் மூலம் ராணுவ வீரர்கள் மீது உள்ள மரியாதை மிகவும் உயர்ந்துள்ளதாகவும் ராணுவ வீரர் முகுந்த்தின் ராணுவ வாழ்க்கை வீரம் காதல் ஆகியவை அற்புதமாக படமாக்கப்பட்டிருப்பதாக  தெரிவித்தார். அதே சமயம் காஷ்மீர் மக்களின் வலிகளை இப்படம் பேசவில்லை என்று கூறி  எஸ் டி பி ஐ கட்சி, மே 17 இயக்கம் ஆகியவை கடந்த சில தினங்களாக திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் என்கின்ற பெயரில் உருவ பொம்மை எரிப்பு தள்ளுமுள்ளு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளத. இதன காரணமாக இந்த படத்திற்கு செல்லலாம் என்று நினைக்கின்ற மக்கள் அங்கு சென்றால் ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்ற சூழலை  ஏற்படுத்தி இருகிறார்கள் என சாடினார். இந்த படத்தில் ஆர் எஸ் எஸ் முழக்கங்கள் எழுப்பப்படுவதாக எஸ்டிபிஐ கட்சியினர் மே 17 இயக்கத்தினர் கூறுகிறார்கள் ஆனால் இந்திய ராணுவத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு முழக்கங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து இஸ்லாமியர்களும் தேசவிரோதிகள் அல்ல பாகிஸ்தானால் தூண்டப்பட்டவர்கள் அல்ல என்பதை எல்லாம் இந்த படத்தில் அருமையாக காட்சிப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். மேலும் இப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள காட்சிகளைப் போல்தான் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததாகவும்,  மோடி பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பாக நம்முடைய இந்திய ராணுவ வீரர்கள் மீது கல் எரியும் சம்பவங்கள் குழந்தைகளை அழைத்து சென்று மூளை சலவை செய்கின்ற செயலை பிரிவினைவாதிகள் தொடர்ந்து செய்து கொண்டே இருந்ததாக தெரிவித்தார்.

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்டுவது இந்த படத்தின் நோக்கம் அல்ல என்றார். இந்திய ராணுவத்தில் நம்முடைய ராணுவ வீரர்கள் எந்த அளவிற்கு உயிரை பணயம் வைத்து பாடு பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த படம் காட்டியிருப்பதாக தெரிவித்தார்.

SDPI, மே 17 இயக்கம் ஆகிய இரண்டு அமைப்புகளும்  தடை செய்யப்பட வேண்டிய அமைப்புகள், இவர்கள் பாகிஸ்தானால் தூண்டி விடப்பட்ட அமைப்புகள் எனவும் இந்த படம் குறித்து தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என தெரிவித்தார். எஸ்டிபிஐ அமைப்பு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதை குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் இருந்ததாகவும் அப்பொழுது இந்த படத்தின் தயாரிப்பாளர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு இருப்பதாலும் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நிறுவனமான ரெட் ஜெயன்ட் ஆக இருப்பதாலும், இந்த படத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்த்துவிட்டு பாராட்டி இருப்பதாகவும் தெரிவித்த அவர் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கின்ற வகையில் பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

இந்த படத்திற்கு மத்திய மாநில அரசுகள் கேலிக்கை வரியில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும், இந்த படத்தை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கு இலவசமாக திரையிட்டு காட்ட வேண்டும் அரசு ஊழியர்கள் காவல்துறையினருக்கு இலவசமாக திரையிட்டு காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநிலத் தலைவர் ஓம்கார் பாலாஜி கைது நடவடிக்கை குறித்து பேசிய அவர், ஈசா யோகா மையத்தின் மீதும் அதன் நிறுவனர் மீதும் அவதூறு கருத்துக்களை பரப்பியவர்கள் தவறான பிரச்சாரம் மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியதற்காக பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தை கட்சியின் சார்பில் அணுகி, முன் ஜாமின் மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டு 13ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்ததாக கூறினார். 13-ஆம் தேதி பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராவார், ஆனால் சட்ட விரோதமாக தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் தேடி பிடிப்பது போல மாற்று உடையில் வந்த காவல் துறையினர் பாலாஜியை அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவரை எங்கு வைத்துள்ளார்கள் என்று கூட தெரியவில்லை என தெரிவித்தார். பாலாஜியை கைது செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவித்த அவர் இன்று மாலைக்குள் அவரை விடுதலை செய்யவில்லை என்றால் நாளை தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

(ஓம்கார் பாலாஜி பேசியது குறித்து 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலாஜியை ஆஜராகும்படி நீதிபதி கூறியுள்ள நிலையில் அவரை கைது செய்யவில்லை என கோவை மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது)

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe