கோவை ராயல் தியேட்டர் ஏன் மூடப்பட்டது? | ராயல் தியேட்டர் வரலாறு - Newsclouds Exclusive

published 1 year ago

கோவை ராயல் தியேட்டர் ஏன் மூடப்பட்டது? | ராயல் தியேட்டர் வரலாறு - Newsclouds Exclusive

கோவை :  நாம் விரும்பி படம் பார்த்த தியேட்டர் இப்போது இல்லை என்றால் மனம் வருத்தப்படுவதுடன் மட்டும் அல்லாமல் பசுமை கலந்த நினைவுகள் நாம் மனதில் வந்து செல்லும்.

ஒவ்வொரு முறை நாம் அந்த தியேட்டரை கடந்து செல்லும் பொழுதும் நாம் அங்கு படம் பார்த்து ஆடி மகிழ்ந்த நினைவுகள் வந்து போகும்.

அப்படிபட்ட ஒரு தியேட்டரைப்  பற்றி பார்க்கலாம்.கோவை ரயில் நிலையத்தில் இருந்து டவுன்ஹால் செல்லும் வழியில் கோனியம்மன் கோவிலுக்கு அருகில் செயல்பட்டு வந்தது தான் ராயல் தியேட்டர். கடந்த 1946ம் ஆண்டு நாடக கொட்டகையாக இந்த திரையரங்கை தொடங்கினார் குருசாமி நாடார். இங்கு முதன் முதலில் டி.கே சண்முகம் பிரதர்ஸ் என்ற நிறுவனம் அவ்வையார் நாடகத்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து 1947ம் ஆண்டு இது ராயல் திரையரங்கமாக மாறியது.

அந்த காலத்து சூப்பர் டூப்பர் ஹீரோக்களான  எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன் ஆகிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட்டு வந்தன.

வருடத்திற்கு மூன்றே திரைப்படங்கள் தான் இங்கு திரையிடப்படும். ஏனென்றால் ஒவ்வொரு திரைப்படமும் 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருந்த காலகட்டம் அது.

மரோசரித்திரா, சந்திரலேகா, சம்சாரம், அவ்வையார் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட்டுள்ளன.

இந்த தொழிலை வெற்றிகரமாக நடத்தி வந்த குருசாமி நாடார் குடும்பத்தினர் தான் கோவையில் மிகப் பிரபலமான உணவகமாக செயல்பட்டு வரும் ஆர்.ஹெச்.ஆர் உணவகத்தையும் நடத்தி வருகின்றனர்.

குருசாமி நாடார் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் ரத்தினவேல் இந்த தொழிலை கையில் எடுத்து நடத்தி வந்தார். புகழ் வெளிச்சம் தரக்கூடிய இந்த தொழிலில், எங்கு சென்றாலும் மரியாதை இருக்கும் என்றும்,  அரசு அலுவலகங்கள் தொடங்கி, கல்லூரி சீட் வரை சிபாரிசு கடிதத்திற்காக பொதுமக்கள் வருவார்கள் என்று தெரிவிக்கிறார் ரத்தினவேல்.

அன்றைய காலகட்டம் என்பது நவீன வசதி குறைந்த காலகட்டமாகும்.அப்போதெல்லாம் தரை டிக்கெட் பைசாவுக்கும், அதிகபட்ச டிக்கெட் 2 ரூபாய்க்கும் வழங்கப்பட்டுள்ளது.

பட இடைவேளையில் காபி, இட்லி, தட்டு முறுக்கு, பாட்டு புத்தகங்கள், சிகரெட், பீடி போன்றவை  விற்பனை செய்யப்படும். மிகவும் எளிமையான காலகட்டம் அது.

இந்த திரையரங்கம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து தற்போது வரை மிகவும் தரமான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து திரையிட்டதாகவும், ஆபாசப் படங்களை திரையிடக்கூடாது என்பது தங்கள் குடும்பத்தினர் கொள்கையாகவே இருந்ததாகவும் தெரிவிக்கிறார் ரத்தினவேல்.

காலத்திற்கு ஏற்ப திரையரங்குகளை மாற்றி கொண்டால் தான் தொழில் வளர்ச்சி ஏற்படும். திரையரங்குகள் நவீன மயமாகும் போது இருக்கைகள், உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு இந்த திரையரங்கம் செயல்பட்டு வந்தது. ஆனால், குறுகிய காலகட்டத்திலேயே புதிய தொழில் நுட்பங்கள் அடுத்தடுத்து அறிமுகமாகியது.

அதே நேரத்தில் ரத்தினவேல் குடும்பத்தாருக்கு திரையரங்கை நடத்தும் ஆர்வம் வெகுவாக குறைந்து உணவக தொழில் மீது நாட்டம் அதிகரித்தது. இதனால் தான் திரையரங்கை அடுத்தகட்டமாக புதுப்பிக்கும் பணிகளை முன்னெடுக்கவில்லை என்று தெரிவிக்கிறார் ரத்தினவேல்.

சினிமா என்பது அனைவரையும் மகிழ்விக்கும் தொழில் என்பதில் ஐயமில்லை.

என்ன தொழில் செய்தாலும் சினிமா தொழில் தான் தனக்கு முக்கியமாக இருந்தது என்றும், ஆனால் தற்போதைய சூழலில் மீண்டும் திரையரங்கை நடத்துவது சிரமம் என்றும் தெரிவிக்கும் ரத்தினவேல் ஒரு திரைப்படம் சிறப்பாக தயாரிக்கப்பட்டால் அது நிச்சயம் வெற்று பெறும் என்கிறார்.

மேலும் சினிமா தொழிலுக்கு அழிவே கிடையாது என்று உறுதியாக தெரிவிக்கிறார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe