தமிழர்களின் புத்தாண்டு குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுவது என்ன?

published 2 weeks ago

தமிழர்களின் புத்தாண்டு குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுவது என்ன?

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

தமிழர் புத்தாண்டு குறித்து தமிழ் இலக்கியங்கள் என்ன குறிப்பிட்டுள்ளன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

சமீப கால தமிழக அரசியலில் தமிழ்ப்புத்தாண்டு குறித்து பல்வேறு விவாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள முடியாது இது திட்டமிட்டு திணிக்கப்பட்டது என்று ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.


இதனிடையே நம் மொழியின் இலக்கியங்கள், புத்தாண்டு என்பதை எப்படி குறிப்பிட்டுள்ளன, சித்திரையை எந்த வகையில் தொடர்புபடுத்துகின்றன என்பதை காண்போம்:

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்டே வருகிறது. நம் பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது.


மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. இதுவே தமிழ் வருடத்தை கணிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சங்க காலத்தில் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் இல்லை. ஆனால் சித்திரையை முதன்மையாக கருதியதற்கு பல சான்றுகள் உள்ளன.


'தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு' என்ற பாரதிதாசன், 'திங்கள் பன்னிரண்டு' என்ற தனது கவிதையில், 'சித்திரை... வைகாசி...' என மாதங்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

வேங்கை பூ பூக்கும் காலத்தை 'தலை நாள்' என்கிறது பத்துப்பாட்டு; வேங்கை மலர் சித்திரையில் பூக்கும்.


அகத்தியரின் பன்னீராயிரம் நூலில், 'மேஷ ராசியில் அசுவினி முதலாம் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் நாளில் வருச புருஷன் அவதரிப்பான்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரை முதல் தேதியே வருடப்பிறப்பு என்பதை இந்த பாடல் பொருள் படுத்துகிறது.


கோடைக் காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1796ல் இலங்கையில் சித்திரை மாதத்தை தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடியது போர்ச்சுகீசியர்களின் குறிப்புகளில் உள்ளன.


"சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்” என்ற தனது வாழ்த்துப் பாடலில் குறிப்பிட்டுள்ளார் ராமலிங்கம் பிள்ளை.

சித்திரை மாதத்தில் கேரளா, மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாடுகின்றன. இந்த மாதத்திலேயே நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் புத்தாண்டு. இந்த தொகுப்பை அனைத்து உறவுகளுக்கும் பகிரவும்.


பண்பு மிகு தமிழராய் அறம் காப்போம்; நிமிர்ந்து நிற்போம்.

அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.


- நியூஸ் க்ளவுட்ஸ் குழு.







சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw