கோவை: கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய செய்தவம் மாளிகையில் கோவை திருப்பூர் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்துவரி உயர்வை திரும்ப பெறுவதை வலியுறுத்தி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய எஸ் பி வேலுமணி, உறுப்பினர் அட்டை முழுமையாக அனைவரிடமும் சென்று சேர வேண்டும் அப்போதுதான் அனைவருக்கும் உணர்வு வரும் என தெரிவித்தார். அதிமுகவில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள், இந்தக் கட்சியில் இந்த இயக்கத்தில் இருப்பதே பெருமை தான் என்றார். மேலும் இந்த இயக்கத்தில் தோல்வி வரும் எனவும் ஆனால் அதனை தொடர்ந்து மிகப்பெரிய வெற்றி வரும் எனவும் கூறினார். மேலும் மு.க. அழகிரி அதிமுக அழிந்துவிட்டது என்றெல்லாம் பேசி இருப்பதாக குறிப்பிட்டார்.
இந்த மூன்று ஆண்டுகளில் திமுக ஒன்றும் செய்யவில்லை எனவும் அதிமுகவை பொருத்தவரை என்ன விமர்சனங்கள் வந்தாலும் 2026 ஆம் ஆண்டு அதிமுக தான் ஆட்சி அமைக்கும் எனவும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவே 30 சதவிகிதம் வந்துவிடும் என்றார். எடப்பாடி பழனிச்சாமி அவரது ஆட்சியில் தான் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு விஷயங்கள் கொண்டுவரப்பட்டது என தெரிவித்தார். அதிமுகவிற்கு வாக்களிக்க அனைவரும் தயாராக இருப்பதாகவும் ஆனால் திமுகவிற்கு வாக்களிக்க யாரும் தயாராக இல்லை எனவும் எனவே அதிமுக வெற்றி பெறுவது உறுதி என கூறினார்.
50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை எடப்பாடி பழனிச்சாமி அவரது ஆட்சியில் கொடுத்துள்ளதாக கூறினார். காவல்துறை திமுகவிற்கு அடிமையாக இருப்பதாக விமர்சித்த அவர் நம்மால் சொந்த இடத்தில் ஒரு லோடு மண் எடுக்க முடிகிறதா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் 2026 ஆம் ஆண்டு கோவையில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தான் வெல்லும் எனவும் எனவே அதிமுக தொண்டர்கள் அனைவரும் கவனமாக இருந்து பணியாற்ற வேண்டும் எனவும் கூறினார். மாநகராட்சி நகராட்சி மின் கட்டணம் வரி உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நமக்கு எதிரி திமுக தான் எனக் கூறிய அவர் இளைஞர்கள் தற்பொழுது அதிமுகவில் சேர தயாராக உள்ளார்கள் அவர்களை அரவணைத்து பொறுப்புகளை கொடுக்க வேண்டும் சிறு சிறு பிரச்சனைகளை கலைந்து ஒன்றாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்..
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றில் வரி உயர்வை உயர்த்திவிட்டனர் கூடுதலாக 6% வரியை உயர்த்தி விட்டனர் அதனை செலுத்த தவறினால் ஒரு சதவிகிதம் வட்டி போடுவது என்ற மோசமான நிலையை உருவாக்கி இருக்கிறது என்றார். கொரோனாவுக்கு பிறகு தொழிலாளர்கள் அனைவரும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்த அவர் வேலை வாய்ப்பினை மின் கட்டண உயர்வு போன்றவற்றால் சிரமப்படுவதாகவும் எனவே இவற்றையெல்லாம் கண்டித்து தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தான் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்துவதாகவும் அறிக்கை வாயிலாக கண்டனத்தை பதிவு செய்வதாகவும் தெரிவித்தார். அந்த வகையில் வருகின்ற எட்டாம் தேதி மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை அதிமுக சார்பில் நடத்தி இருப்பதாகவும் அதனை எப்படி சிறப்பான முறையில் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். விலை உயர்வை நிறுத்துகின்ற வகையில் இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
திமுக கோவை மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த ஒரு திட்டத்தையும் தரவில்லை எனவும் எனவே மக்கள் மிகவும் அவதியுற்று இருக்கிறார்கள் என தெரிவித்தார். எப்பொழுது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார் எனவும் விடுபட்ட மற்றும் செய்யாத திட்டங்களை எல்லாம் அவர் தலைமையில் செய்வோம் என தெரிவித்தார். இந்த மனித சங்கிலி போராட்டம் என்பதே அனைவருக்கும் ஆனது எனவே பொதுமக்கள் தொழில்துறையினர் தொழிலாளர்கள் என அனைவரும் இதில் பங்கேற்கலாம் என தெரிவித்தார்.
மும்முனை மின்சாரத்தை எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுதே முழுமையாக அறிந்ததாகவும், ஆனால் தற்பொழுது உள்ள திமுக அரசாங்கமே முழுமையாக வழங்கவில்லை என தெரிவித்தார். மேலும் தொழிலாளர்களுக்கு பீக் ஹவர் கட்டணம் உட்பட மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.