கோவை: தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாக துறை ஆணையர் உத்தரவின் படியும், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படியும், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு (பேக்கரி மற்றும் ஹோட்டல்களில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள் / மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்) பண்டிகை காலங்களில் மட்டும் இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பவர்கள்/மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி இனிப்பு, காரவகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் கலப்படமற்ற மற்றும் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். இனிப்பு/காரம் தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, இனிப்பு மற்றும் கார வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ, அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட நிறமிகளை தவிர மற்ற நிறமிகளை இனிப்பு மற்றும் காரவகைகளில் உபயோகிக்கக் கூடாது. தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொண்டு பொட்டலமிட பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் உடனடியாக உணவுப் பாதுகாப்புதரங்கள் சட்டம் 2006 பிரிவு 58-ன் படி ரூ.2000/- அபராதம் விதிக்கப்படும்.
இனிப்பு/கார மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பின் போதும், இருப்பு வைக்கும் போதும் அச்சிடப்பட்ட செய்திதாள்களை தரையில் விரித்து எண்ணெய்யை உறிஞ்சும் வகையில் வைத்திருக்கும் நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற கூடாது. மேலும் சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பேப்பர்/கவர் கொண்டு பொட்டலமிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதனை மீறினால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டம் 2006-ன் படி அபராதம் விதிக்கப்படும்.
இனிப்புகளை தயாரிக்க அனுமதிக்கப்பட்ட கலர் நிறமிகள், அனுமதிக்கப்பட்ட
அளவுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் அளவுக்கு அதிகமாக கலர் நிறமிகள் இனிப்பு வகைகளில் சேர்க்கப்பட்டிருப்பது களஆய்வில் கண்டறியப்பட்டால், உணவு மாதிரி எடுக்கப்பட்டு, உணவு பகுப்பாய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் பகுப்பாய்வக அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட உணவு வணிகரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய், நெய், வனஸ்பதி போன்ற பிற இதர மூலப் பொருட்களின் விபரங்களை முழுமையாக அதன் கொள்முதல் கேன்களில்/டின்/பாக்கெட்டுகள்/ மூட்டை போன்றவைகளில் லேபிளில் முழுமையாக அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை தனியாக இருப்பு வைக்க வேண்டும் மற்றும் பால் சார்ந்த இனிப்பு வகைகளின் உபயோகிக்கும் கால அளவை லேபிளில் முழுமையாக குறிப்பிட வேண்டும்.
பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை பிற இனிப்பு வகைகளோடு சேர்க்காமல் தனியாக பேக் செய்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும். இனிப்பு மற்றும் காரவகைகளை தூய்மையான குடிநீரைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும். இந்த இனிப்பு, காரங்களை தயாரித்த பிறகு பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை சுத்தமாக கழுவி பூஞ்சை தொற்று வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இனிப்பு வகைகள் சில்லறை முறையில் (Non Packed/Loose Sweets) விற்கப்படும் பொருட்களில், பயன்படுத்தும் தேதி (Use by Date) தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளில் எண்ணெய் / நெய் / வனஸ்பதி பயன்படுத்தப்பட்டதா எனவும் பால் சார்ந்த பொருட்கள் பற்றிய பதிவுகள் காட்சி படுத்தபட்டிருக்க வேண்டும் மற்றும் பதிவேட்டிலும் பராமரிக்கப்படவேண்டும்.
பண்டிகை காலத்தில் மட்டும் சமுதாய கூடங்கள், பிற இதர இடங்கள் மற்றும் கல்யாண மண்டபங்களில் தற்காலிகமாக இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு/உரிமம் தாங்களாகவே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் (FSSAI) இந்திய உணவுப் பாதுகாப்பு துறையால் (Food Safety Mithra) அங்கீகரீக்கப்பட்ட கோவை மாவட்ட முகவர்களான ராமசந்திரன் பாபுராஜ்-9940953624, மோகன்ராஜ் -7092592561. பாலமுருகன்-9361270767, நீலகண்டன்- 9739320193, ப்ரியா கிருஷ்ணசாமி -9842905604, தீபா சுதன்கோபால்- 9789914439, வைஷ்ணவி பெருமாள்சாமி- 9715709625, விக்னேஷ்-9688449905, சபரீஸ்வரன் திருமலைசாமி- 9677711700, சிவனேஸ்வரன் முத்துச்சாமி
8248775546, வெற்றிசெல்வன்- 9566950273, முகம்மது ஷெரீப்- 6369902410, போன்ற சேவை மையங்களை தொடர்பு கொண்டு உரிமம்/ பதிவு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் இனிப்பு மற்றும் காரவகை உணவு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், கையாள்பவர்கள் அனைவரும் FoSTaC (உணவு பாதுகாப்பு சார்ந்த) பயிற்சியினை பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணியில்
ஈடுபடும் பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவ தகுதி சான்று (Medical Fitness Certificate ) வைத்திருக்க வேண்டும்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு சீட்டு
நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொது மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இனிப்பு வகைகள் தயாரித்து விற்பனை செய்பவர்கள் உணவுப் பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006, பிரிவு 31-ன் கீழ் உரிமம்/பதிவு பெற்றிருத்தல் வேண்டும். ஏற்கனவே உரிமம் பெற்று, காலக்கெடு முடிந்தால் அதனை உடனே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். களஆய்வின் போது உணவுப் பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டத்தின் கீழ் உரிமம்/பதிவு சான்று பெறப்படாதது கண்டறியப்பட்டால் உணவு வணிகரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு, விபரச்சீட்டு இடும் போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுபொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியனவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவுபொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்
FSSAI-ன் வழிகாட்டுதலின் படி, விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து இனிப்பு வகைகளுக்கும் தயாரிப்பு தேதி மற்றும் உண்ண தகுந்த காலம் ஆகியவற்றை அந்தந்த இனிப்பு வகைகள் அருகே ஒரு சிறிய போர்டில் எழுதி காட்சிப்படுத்த வேண்டும். உதாரணம்:- ரசகுலா, ரசமலாய்: குளிர் சாதனபெட்டியில் 2 நாட்கள், ஜிலேபி: அறை வெப்பநிலையில் 2 நாட்கள். பால் கோவா மற்றும் பேடா : அறை வெப்பநிலையில் 4 நாட்கள். அதிரசம், மைசூர் பாக் மற்றும் அல்வா : அறைவெப்பநிலையில் 7 நாட்கள்.
பணியாளர்கள் கையுறை, முடி கவசம், முக கவசம் மற்றும் மேலங்கி போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து தான் பணியாற்ற வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணையை மீண்டும் திரும்ப சூடுபடுத்தி இனிப்பு
மற்றும் கார வகைகளை தயாரிக்க பயன்படுத்த கூடாது. எனவே RUCO (Repurpose Used Cooking Oil) திட்டத்தின் கீழ் இந்திய உணவுப் பாதுகாப்பு துறையால் (FSSAI) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களான RECO ஹரீஷ் 8870655565, Bio Refineries: முரளி, 8220011443 மற்றும் பாரத் பயோபுரோடக்டஸ், 9994876666, SSS கார்ப்ரேஷன்: பிரபு-9566630313 போன்ற நிறுவனங்களை தொடர்பு கொண்டு ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை அதற்கான தொகையை அவர்களிடம் பெற்றுக் கொண்டு (Used Oil) வழங்கலாம்.
மேலும் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள்/ மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் பண்டிகை காலங்கள் மற்றும் பிற நாட்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அல்லாது வேறு எவரேனும் போலியாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் என கூறிக்கொண்டு ஆய்வு மேற்கொண்டால் அவர்களின் உணவு பாதுகாப்பு துறையின் அடையாள அட்டையை காண்பிக்குமாறும், மேலும் இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பினர், துறை அலுவலக எண் 0422-2220922 மற்றும் 9361638703 என்ற எண்ணிற்கு
உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
எனவே பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு/உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பொது மக்கள் இது குறித்து புகார் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் மற்றும் Google Play store-இருந்து உணவு பாதுகாப்பு துறையின் tnfoodsafety consumer App என்ற செயலினை பதிவிறக்கம் செய்தும் தங்களின் புகாரினை பதிவு செய்யலாம் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.