ராஜஸ்தானில் இருந்து போதைக்காக கோவைக்கு கொண்டுவரப்பட்ட மாத்திரைகள் பறிமுதல்...

published 1 week ago

ராஜஸ்தானில் இருந்து போதைக்காக கோவைக்கு கொண்டுவரப்பட்ட மாத்திரைகள் பறிமுதல்...

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் , கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில், போதைப் பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக கோவை மாநகர காவல் துணை ஆணையர்கள் ஸ்டாலின் சரவணகுமார் ஆகியோர் தலைமையில், தனித்தனியே இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான தனிப்படை, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இருந்து மெத், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள்  கொரியர் மூலமாக அனுப்பப்பட்டது தெரியவந்ததாகவும் இதில் ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மற்ற குற்றவாளிகளை பிடிப்பதற்கான நடவடிக்கையில் தனிப்படையினர் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

இந்தியா போஸ்ட்-ல் போதைப் பொருட்கள் வந்தது தொடர்பாக அஞ்சல் துறையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இது போன்ற போதைப் பொருட்கள் வருவதை தடுப்பதற்கு அஞ்சல் துறையின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.

கோவை மாநகர காவல் (தெற்கு) துணை ஆணையர் சரவணகுமார் தலைமையிலான தனிப்படையினர், போதை மாத்திரைகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறிய காவல் ஆணையர், ஏற்கனவே கர்நாடகாவில் இருந்து கோவைக்கு வந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்தவர்களை கைது செய்த பிறகு கர்நாடகாவில் இருந்து போதை மாத்திரை வருவது நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து, ஹரியானாவில் இருந்து கொரியர் மூலம் போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர்களையும் கைது செய்திருப்பதாகவும் கூறினார். மேலும், கேரள மாநிலம் மன்னார்காடு, பாலக்காடு  பகுதிகளில் இருந்து போலி மருந்து சீட்டு மூலமாக மாத்திரைகள் வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்ததில் 4 நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் இன்று, ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் கோவை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட போதைக்காக பயன்படுத்தப்படும் 7,800 வலி நிவாரண மாத்திரைகளை கோவை மாநகர காவல் தனிப்படையினர் பறிமுதல் செய்ததாகவும் இதில் தற்போது மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் கோவை மாநகர காவல்துறை ஈடுபட்டு வருவதாகவும்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதோடு போதைப் பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

கோவை மாநகர மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரியை முழுமையாக ஒழிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கடந்த மூன்று மாதங்களுக்குள் லாட்டரி தொடர்பாக ஆறு வழக்குகள் பதியப்பட்டதாகவும் 45 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதில் 27 நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

2024-ம் ஆண்டு மட்டும் 93 கோடி ரூபாய் சைபர் குற்றங்கள் மூலம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் இதில் சுமார் 50 கோடி ரூபாய் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தொகை நீதிமன்ற உத்தரவின் படி, பணத்தை இழந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கோவை மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினி தலைமையில் சைபர் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

முதன்முறையாக குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகள், தொடர்ந்து குற்றத்தில் ஈடுபட்டால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, பயிற்சி பெற்ற காவல் அதிகாரிகள் மூலம் ஆலோசனை வழங்கப்படுவதாகவும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe