அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் அரசாங்கத்தின் தோல்வி- கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி…

published 1 week ago

அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம்  அரசாங்கத்தின் தோல்வி- கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி…

கோவை: கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள காய்கறி பஸ் ஸ்டாப் பகுதியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்களை சந்தித்தார்‌.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறுகையில், சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருப்பதாகவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு இது சமீபத்திய உதாரணம் என்றும் கூறினார்.

அரசு மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட மக்கள் பணியில் இருப்பவர்களின் பணிச்சுமையை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்துவது அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது ஆகியவை மிகவும் முக்கியமானவை என்றும் கூறினார். மேலும், அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதாகவும் இது அரசாங்கத்தின் தோல்வி என்றும் சாடினார்.

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு நிறைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்ததாகவும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் தகுதி வாய்ந்த மகளிர் யாரும் விடுபடக்கூடாது என்று சட்டப்பேரவையில் கூறியிருந்ததாகவும் கூறிய அவர், பல போலி ரேஷன் கார்டுகள் இருக்கின்ற சூழலில், யார் சரியான நபர் என்பதை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

நிறைய அரசு மருத்துவமனைகள் உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் அரசு மருத்துவமனைக்கு செல்ல மக்கள் பயப்படும் சூழல் இருப்பதாகவும் கூறினார்.

மக்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் ஆனால் ஆயுஷ்மான் பாரத் திட்ட அட்டையை கொண்டு செல்லும் மக்களிடம் நிறைய மருத்துவமனைகள் மாநில அரசின் காப்பீட்டு திட்ட அட்டையை கொண்டு வரும்படி கேட்பதாகவும் கூறிய அவர், அப்படியானால் மருத்துவமனைகள் மாநில அரசால் மிரட்டப்படுகிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

மேலும், எந்த காப்பீட்டு அட்டை கொண்டு வந்தாலும் அந்தத் திட்டத்திற்கான பலனை அளிக்க வேண்டும் என்று மருத்துவமனைகளுக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜம்மு காஷ்மீர் அமைதியாகவும் இயல்பாக இயங்குகின்ற சூழலை பிரதமர் மோடி ஏற்படுத்தி இருக்கிறார் என்றும் தீவிரவாத தாக்குதல் பெருமளவு குறைக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறிய அவர், மதப் பிரிவினை வாதத்தை பேசுகின்ற அரசியல் சக்திகள் தமிழ்நாட்டில் பிரச்சனையை உருவாக்க முடியுமா என்று பார்க்கிறார்கள் என்றார். மேலும், அமரன் திரைப்படத்தில் எந்த இடத்தில் பொய் இருக்கிறது என்று சொல்லச் சொல்லுங்கள் என்று கூறியதோடு இவர்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

அரசு திட்டங்களுக்கு கலைஞர் பெயரை மட்டுமே வைப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி இருப்பது குறித்த கேள்விக்கு,
அரசுத் திட்டங்களுக்கு பெயர் வைப்பதில் அரசுக்கு உரிமை இருக்கிறது என்றாலும் மீண்டும் மீண்டும் ஒரே பெயரை மட்டுமே வைப்பது வரலாற்றில் ஒருவர் மட்டுமே நாட்டு நலனுக்காக பணி செய்தார் என்ற எண்ணத்தை உருவாக்கும் என்று கூறிய அவர், பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்திருக்கும் பிரதமர் மோடி, அரசு திட்டங்களுக்கு பிரதம மந்திரி என்றுதான்  பெயர் சூட்டுவாரே தவிர அவருடைய பெயரை வைத்ததில்லை என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe