கோவை மாநகர புதிய பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் அமித்ஷா...

published 6 hours ago

கோவை மாநகர புதிய பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் அமித்ஷா...

கோவை: கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.

மேலும், காணொளி காட்சி மூலம் ராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான 
வானதி சீனிவாசன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக விழாவிற்கு வந்த அமித்ஷா அவர்களுக்கு மாலை அணிவித்து பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சி கொடி ஏற்றி வைத்து, பசுவிற்கு அகத்திக்கீரை உணவளித்து, மரக் கன்று நட்டு வைத்தார்.

தொடர்ந்து, புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்ட அமித்ஷா திறப்பு விழா மேடைக்கு வந்தார்.

இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "நாட்டு மக்களுக்காக சொன்னதை செய்து காட்டிய கட்சியாக பாஜக உள்ளது. கட்சியின் நிறுவனர்கள் கண்ட கனவை நிறைவேற்றி வருகிறார்கள் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா ஆகியோர்.

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை எடுத்தே ஆக வேண்டும் என தினதயால் அவர்கள் உயிர் தியாகம் செய்தார்கள். அதை இன்று நிறைவேற்றியுள்ளது பாஜக.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என சொன்னோம் அதை செய்தோம். இன்னும் செய்ய வேண்டியது யூனிஃபார்ம் சிவில் கோடு தான். அதையும் ஒவ்வொரு மாநிலமாக அமல்படுத்தி வருகிறோம். மக்களுக்காக சொன்னதை அனைத்தையும் செய்துள்ளோம் நாம்" என தெரிவித்தார்.

அடுத்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பாஜகவின் கட்சி அலுவலகம் இருக்க வேண்டும் என உறுதியோடு செயல்பட்டு இன்று கோயம்புத்தூர், ராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் கட்சி அலுவலகம் திறந்து வைத்துள்ள அமித்ஷாவிற்கு எங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய அரசு வழங்கும் அனைத்து மக்கள் நல திட்டங்களையும் தடுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமரின் மக்கள் மருந்தக திட்டத்தை பெயர் மாற்றி முதல்வர் மருந்தகம் என கொண்டு வந்துள்ளனர். பிரதமர் மோடி இத்திட்டத்திற்கு மோடி மருந்தகம் என பெயர் வைக்கவில்லை. பிரதமர் மருந்தகம் என்று தான் அதற்கு பெயர். அதாவது,  தனி நபர்களை போற்றும் அரசியலை கைவிட்டு இப்போது சாதாரண மக்களுக்கான அரசியலுக்கு வந்துள்ளனர். கலைஞர் நூலகம் என பெயர் வைப்பவர்கள், முதல்வர் மருந்தகம் என பெயர் வைத்திருப்பதே நமது வெற்றி தான்.

எத்தனை கைது நடவடிக்கை செய்தாலும் பாஜக தொண்டர்கள் மேலும் வலுவாக செயல்பட்டு திமுக ஆட்சியை நீக்குவார்கள்.

பாஜக தமிழை புறக்கணிப்பதாக இவர்கள் கூறுகிறார்கள். மூன்றாவது முறையாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை, வாரணாசியில் பாரதியார் இருக்கை என உருவாக்கி பிரதமர் மோடி தமிழுக்கு மரியாதை செய்து வருகிறார்.

2022 நவம்பர் 12 ஆம் தேதி பேசிய அமித்ஷா, தமிழகத்தில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தமிழில் கற்பிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார். முன்னதாக, தமிழ் உட்பட 13 மொழிகளில் சி.ஆர்.பி.எப் தேர்வு எழுதும் வகையில் அறிவித்தவர் அமித்ஷா. இப்படி தமிழுக்கு மரியாதை செய்பவர்கள் எப்படி ஹிந்தியை தினிப்பார்கள்.

2026 ல் நிச்சயம் திமுக அரசு அகற்றப்பட்டு, பாஜக ஆட்சி தமிழகத்தில் அமையும்" என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் ஊழல் புரையோடி போயிருப்பதாகவும், கனிம வள கொள்ளை, லஞ்சம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் அதிகம் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினர். இவற்றை மறைக்கவே புதிய பிரச்சினைகளை திமுகவினர் உருவாக்கி வருகின்றனர் என்றவர், புதிய கண்டுபிடிப்பாக தொகுதி மறுவரையால் பாராளுமன்றத்தில் மாநிலத்தின் எண்ணிக்கை குறையும் என பொய்யான தகவலை கூறி வருகின்றனர். இதற்காக திமுக சார்பில் கூட்டம் நடைபெறுகிறது.

மக்கள் தொகை அடிப்படையிலும் விகிதாச்சார அடிப்படையிலும் தான் தொகுதி மறுவரை செய்யப்படும் என பாராளுமன்றத்தில் பிரதமர் உறுதி அளித்துள்ளார். இதனால் பாராளுமன்றத்தில் தென் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தான் செய்யும். எந்த விதத்திலும் பாதிப்புகள் ஏற்படாது. ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார் என அமித்ஷா பேசினார்.

இதனையடுத்து, வெள்ளியங்கிரி பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை (6 மணிக்கு) நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்க உள்ளார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe