ஜப்தி செய்வதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்த நீதிமன்ற ஊழியர்கள்

published 2 years ago

ஜப்தி செய்வதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்த நீதிமன்ற ஊழியர்கள்

கோவை: சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 39), லேத் பட்டறை தொழிலாளி. இவர் கடந்த 5-8-2011-ஆம் ஆண்டு தனது சகோதரர் முரளி கிருஷ்ணன் (38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வால்பாறையில் உள்ள சோலையார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வனத்துறை வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். இதில் முரளி கிருஷ்ணனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இந்த விபத்து வழக்கில் உரிய இழப்பீடு வழங்கக் கோரி சத்தியமூர்த்தி மனைவி சுகந்தி சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2018-ஆம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் சத்தியமூர்த்திக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.20 லட்சத்து 40 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேபோல் முரளி கிருஷ்ணனுக்கு ரூ.20 லட்சத்து 11 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என சேலம் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி அரசு தரப்பிலிருந்து 50 சதவீத இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகையை வழங்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கோவை மாவட்ட 4-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு 2020-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கோவை நீதிமன்றத்து அமீனா மருதையன், சேலம் நீதிமன்றம் அமீனா சண்முகம் ஆகியோர் கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 1 கார், 3 ஜீப், 25 கம்ப்யூட்டர் போன்ற ரூ 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நீதிமன்றத்து ஊழியர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர். பேச்சு வார்த்தைக்கு பிறகே பொருட்களை ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்துச்செல்வார்களா? என்பது தெரியவரும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe