ஏனுங்க.. கோயம்புத்தூருல பீச் இல்லயேனு ஃபீல் பண்ணுறீங்களா? இதோ இருக்குங்க பீச்…!

published 1 year ago

ஏனுங்க.. கோயம்புத்தூருல பீச் இல்லயேனு ஃபீல் பண்ணுறீங்களா? இதோ இருக்குங்க பீச்…!

கோவை: கடல் அலையின் இதமான ஓசையையும், தாவித்தாவி நம்மை பற்றிக் கொள்ளத் துடிக்கும் அதன் அலைகளில் கால் நனைப்பதையும் விரும்பாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.  

கோவை உட்பட தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் நமது நாட்டின் மத்திய நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ளது. இப்படி நிலப் பரப்பினால் சூழப்பட்டுள்ள பகுதியானது 'லாண்ட் லாக்ட் ஏரியா' என்று அழைக்கப்படுகிறது.

இதனால் இங்கு கடற்கரையோ, துறைமுகமோ இல்லை என்பதும், விடுமுறை நாட்களில் சுற்றத்தாருடன் கடற்கரைக்கு சென்று விளையாட முடியவில்லையே என்பதும் நம்மில் பலருக்குள் இருக்கும் ஆதங்கமாகவே உள்ளது.

"கடற்கரைக்கு போயே ஆகனும்" என்று  அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கும், நம் மனதுக்கு பிடித்தவர்களுடன் கடற்கரைக்கு சென்று வருடிச் செல்லும் அலையோடு நின்று வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என விரும்புவோருக்குமான தகவல் தான் இது…

ஆமாங்க, கோவைக்கு மிக அருகில் இருக்கும் கடற்கறையைப் பற்றி தான் நாம் இந்த செய்தியில் தெரிந்துகொள்ளப்போகிறோம்...

கோவையில் இருந்து 116 கிமீ தூரத்திலேயே இருக்கும் இந்த கடற்கரையிற்கு  2 மணி நேரத்திற்குள் நாம் சென்று விட முடியும். கேரளா மாநிலம் மலப்புரம் தொகுதியில் அமைந்துள்ளது பொன்னானியில் உள்ள இந்த பதிஞ்ஜரேக்கரா கடற்கரை.

மலப்புரத்தின் திப்பு சுல்தான் சாலையில் அமைந்துள்ள இந்த கடற்கரை அரபிக் கடலின் கரையில் அமைந்துள்ளது. பசுமையான மரங்களும், ஒளிரும் மணலும், வானத்தின் வேறுபடும் நிறங்களும் நிறைந்த இந்த நீண்ட கடற்கரையின் காட்சி இந்த இடத்தின் இயற்கை அழகிற்கான இணையில்லா காரணிகளாக உள்ளன. 

இவ்விடத்தின் இயற்கை அழகை ரசிக்கும் சுற்றிலாப் பயணிகள் இக்கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்தும் கண்கவர் காட்சிகளை ரசிக்க முடியும்.

பொன்னானியில் இந்த கடற்கரையைத் தவிர பிற சுற்றுலா தளங்களும் உள்ளன. பாரதப்புழா மற்றும் திரூர்புழா ஆறுகள் கடலில் சங்கமிக்கும் இடம், பழையங்கடி பள்ளிவாசல், காடாம்புழா பகவதி கோவில், சாம்ரவட்டம் சாஸ்தா கோவில், திரிபிரங்கோடு கருடன் கோவில், நவ முகுந்தா கோயில் ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன.

பொன்னானி நகரம், சுற்றுலா மட்டுமல்லாமல் மத நல்லிணக்கத்திற்கும் நன்கு அறியப்பட்டதாகும். கோவில்கள் மட்டுமல்லாமல் ஏராளமான மசூதிகளையும் கொண்ட பொன்னானி நகரம் தென்னிந்தியாவின் 'சிறிய மெக்கா' என்று அழைக்கப்படுகிறது. பொன்னானியின் மக்கள் தொகையில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரு சிறந்த கலவையாக அமைந்துள்ளது.

இங்கு அமைந்திருக்கும் 'துஞ்சன் ஸ்மாரகம்' என்று அழைக்கப்படும் பழம்பெரும் மலையாளக் கவிஞர் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனின் நினைவகம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இவர் 'மலையாள மொழியின் தந்தை' எனக் கருதப்படுகிறார் என்பது கூடுதல் தகவல்.

26வது கனெக்ஷன் விளையாட்டு.. உங்களால் விடை கண்டுபிடிக்க முடிகிறதா? விடை அடுத்தடுத்த செய்திகளுக்குள் பதிவிடப்படும்..

இங்கு கடற்கரை மற்றும் வர்த்தக துறைமுகமும் அமிந்திருப்பது கூடுதல் சிறப்பு. கேரளாவின் பழமையான துறைமுகங்களில் ஒன்றான பொன்னானி துறைமுகம் பாரதப்புழா ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. மலபார் பகுதியின் பொருளாதாரத்திலும் பெரும் செல்வாக்கு கொண்ட அழகிய நகரமான இவ்வூர் ஒரு முக்கியமான மீன்பிடி மையமாகவும் இருக்கிறது. இந்த இடம் ஜாமோரின் ஆட்சி காலத்தின் போது மலபாரின் இரண்டாவது தலைநகராக இருந்தது என்பதும் இந்நகரத்தின் பெருமைகளுள் சேரும்.

கோவையில் கடற்கரை இல்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உடனே புறப்படுங்கள் 2 மணி நேர பயணத்தில் கடற்கரையில் ரசித்துவிட்டு திரும்பலாம்.

கோவை மக்களே.. நம்ம ஊர் செய்திகளை அறிந்துகொள்ளவும், கனெக்ஷன் விளையாட்டுகளை விளையாடவும் நமது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம்.. குழுவில் இணைய லிங்க்-ஐ சொடுக்கவும்.. https://chat.whatsapp.com/J30Hw99ftHR2wHiYb8sllV

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe