கோவை காந்தி பூங்காவில் தஞ்சம் புகுந்த வவ்வால்கள்.

published 1 year ago

கோவை காந்தி பூங்காவில் தஞ்சம் புகுந்த வவ்வால்கள்.

கோவை : கோவை மாநகரத்தில் வ.உ.சி. பூங்காவிற்கு அடுத்தபடியாக, காந்தி பூங்கா மிகப்பெரிய அளவில் அமைந்து உள்ளது. இது தற்போது புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. எனவே பூங்காவிற்கு வரும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சலீவன் வீதி, தெலுங்கு வீதி ,ம.ந.க.வீதி உப்பார வீதி , ஆர். எஸ் புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் நடைப்பயிற்சிக்கு வந்து செல்கின்றனர். எனவே அங்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கும்.

இந்த நிலையில் காந்தி பூங்கா பகுதியில் உள்ள அனைத்து மரங்களிலும் வவ்வால்கள் தஞ்சம் அடைந்து உள்ளன. அவற்றின் கீச்சுக் குரல்கள் எந்த நேரமும் ஒலித்துக் கொண்டு உள்ளன. இது அமைதியைத் தேடி பூங்காவுக்கு வரும் மக்களிடம் ஒரு சிலநேரங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. 

இதுகுறித்து நடைப்பயிற்சிக்கு வந்திருந்த பெண்கள் சிலர் கூறுகையில், தினந்தோறும் நடைப்பயிற்சிக்கு வரும் எங்களுக்குக் காந்தி பூங்கா ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இங்கு ஏராளமானோர் தினமும் வந்திருந்து இளைப்பாறி விட்டுச் செல்வர். இந்த நிலையில் காந்தி பூங்கா மரங்களில் சமீப காலமாக வவ்வால்கள் நூற்றுக்கணக்கில் தஞ்சம் புகுந்து உள்ளன. அவற்றின் இரைச்சல் எந்த நேரம் கேட்டுக் கொண்டு உள்ளது. இது எங்களுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது.

பொதுவாக வவ்வால்கள் வீட்டிற்குள் வந்தால் அபசகுணம் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் ஊருக்கு பொதுவான பூங்காவில் அந்த வவ்வால்களைப் பார்க்கும்போது மனதிற்குள் இனம்புரியாத ஒரு பதட்டம், பயம் ஏற்படுகிறது. மேலும் வவ்வால்கள் போடும் எச்சங்கள், ஒருசில வைரஸ் கிருமியைப் பரப்பும் சக்தி உடையவை. 

அவற்றைக் குழந்தைகள் மிதிக்க வேண்டி உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வவ்வால்களின் எச்சம் மூலம் மிகக் குறைந்த அளவு வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகள் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே அவற்றிலிருந்து பொதுமக்கள் விலகி நிற்பது நல்லது என்று கால்நடை வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.எனவே காந்தி பூங்கா பகுதியிலிருந்து வவ்வால்களை அப்புறப்படுத்தினால் அனைவரும் பயம், தயக்கம் இன்றி நிம்மதியாக இளைப்பாறலாம். எனவே கோவை மாநகராட்சி இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe