கொள்ளை பணத்தில் ரூ.4.5 கோடியில் மில் வாங்கிய கொள்ளையன் கோவை போலிசாரால் கைது…

published 7 months ago

கொள்ளை பணத்தில் ரூ.4.5 கோடியில் மில் வாங்கிய கொள்ளையன் கோவை போலிசாரால் கைது…

கோவை; கோவையில் சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், துடியலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 18 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. 

சிங்காநல்லூர் மற்றும் பீளமேட்டில் நள்ளிரவில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம், நகை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், எஸ்ஐ கார்த்திகேயன் அடங்கிய தனிப்படையினர் கோவையில் ஒரு வீட்டில் கொள்ைளயடிக்க திட்டமிட்ட நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தேனி பெரியகுளத்தை சேர்ந்த ‘ராடு மேன்’ என அழைக்கப்படும் மூர்த்தி (38) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து அவரது கூட்டாளியான தேனியை சேர்ந்த அம்சராஜ் (26) என்பவரையும் போலீசார் பிடித்தனர். 2 பேரிடமும் போலீசார் விசாரித்தபோது இவர்கள் நடத்திய கொள்ளை விவரங்கள் தெரியவந்தது. இதையடுத்து மூர்த்தி, அம்சராஜ் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக நேற்று துணை கமிஷனர் ஸ்டாலின் கூறியதாவது: மூர்த்தி கடந்த 4 ஆண்டாக திருட்டு, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது தமிழ்நாடு அளவில் 68 கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர் இதுவரை எங்கேயும் போலீசில் சிக்கவில்லை. முதல் முறையாக கோவையில் இவர் கைதாகி இருக்கிறார். இவரிடம் ஒரு கார், 6 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளை பணத்தில் ரூ.13 லட்சத்தில் சொகுசு பைக் வாங்கியிருக்கிறார். ராஜபாளையத்தில் ரூ.4.5 கோடியில் ஸ்பின்னிங் மில் வாங்கியுள்ளார்.
ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டில் சுமார் ரூ.1.5 கோடி ரூபாயில் 57 சென்ட் இடம் வாங்கியிருக்கிறார். 

அங்கே கட்டிடம் கட்டி, கடை நடத்த திட்டமிட்டிருந்தார். மாநில அளவில் 68 கொள்ளை வழக்கில் 1,500 பவுன் தங்க நகைகள், ரூ.1.76 கோடி கொள்ளையடித்துள்ளார். இவர் தனது நகை, பணத்தை மனைவி மூலமாக பல்வேறு இடங்களில் சொத்து வாங்கியுள்ளார். இவருடன் தொடர்புடைய விருதுநகரை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் விருதுநகர் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

மூர்த்தியின் கூட்டாளிகளான மனோஜ்குமார், சுதாகர், ராம் பிரகாஷ், பிரகாஷ் ஆகியோரை தேடி வருகிறோம். கொள்ளையடித்த பணத்தை இவர்கள் பங்கு போட்டுள்ளனர். சந்திரசேகரன், பெருமாள், காளிதாஸ், ஒரு பெண் ஆகியோர் மூலமாக நகைகளை உருக்கி தங்கக்கட்டியாக மாற்றி விற்பனை செய்துள்ளனர். மூர்த்தியின் மனைவி ராஜபாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மூர்த்தி மீது விருதுநகரில் 20 வழக்குகள், மதுரையில் 14 வழக்குகள், திருச்சியில் 16 வழக்குகள் உள்ளன.
கோவையில் அவர் கொள்ளையடித்த 63 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. மூர்த்தியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கொள்ளையில் நூதனமாக செயல்பட்டு கைவரிசை காட்டிய மூர்த்தியை பிடித்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மூர்த்தியுடன் தொடர்புடைய மற்ற கொள்ளையர்களையும் விரைவில் பிடித்து விடுவோம். இவ்வாறு துணை கமிஷனர் ஸ்டாலின் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe