டாஸ்மாக்கில் நிலவும் பிரச்சனைகள்- கோவையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட டாஸ்மாக் ஊழியர்கள்...

published 6 months ago

டாஸ்மாக்கில் நிலவும் பிரச்சனைகள்- கோவையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட டாஸ்மாக் ஊழியர்கள்...

கோவை: டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் தமிழகம் முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் எனக்கோரி, கோயம்புத்தூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், FL2 பார்களுக்கு அனுமதி அளிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய, டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன (சிஐடியு)  பொதுச் செயலாளர் திருச்செல்வன் கூறுகையில், "டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்த பிரதான கோரிக்கை இரு ஆட்சியாளர்களாலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. 1981 ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட, பணி நிரந்தர தகுதி வழங்கள் சட்டம், ஒரு தொழிலாளி இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் பணி புரிந்தால், அவருக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் தற்போது தமிழக அரசே அந்த சட்டத்தை அவமதித்து வருகிறது. தொழிலாளர் துறை, டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் பெற தகுதி உடையவர்கள் என்று உத்தரவு வழங்கிய பின்னும் அதற்கு மதிப்பளிக்காமல் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதனைத் தொழிலாளர் விரோத நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம்." என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "டாஸ்மாக்கில் பணியாற்றக் கூடிய நிரந்தர ஊழியர்களுக்கு 60 வயது ஓய்வு வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடை ஊழியர்களுக்கு 58 வயதை ஓய்வு வயதாக அறிவித்து, அவர்கள் எந்தவித சட்ட சலுகையும் இல்லாமல் பணியிலிருந்து வெளியேற்றப்படும் சூழலை ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். டாஸ்மாக் நிறுவனம் அரசு நிறுவனமாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் முழுவதும் தனிநபர்கள் வருமானம் ஈட்டும் வகையிலேயே இருந்து வருகிறது." என்று குற்றம் சாட்டினார்.

மேலும், "டாஸ்மார்க் நிறுவனம், தனது நீதிமன்ற பிரமாண பத்திரத்தில், 136 கோடி இழப்பு என்று குறிப்பிட்டுள்ளது. கடைகளில் உள்ள மதுபானங்களையும் கிடங்கில் உள்ள மதுபானங்களையும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 5000 கோடிக்கு அடமானம் வைத்துள்ளது. அதிக வருமானம் ஈட்டக்கூடிய டாஸ்மாக் நிறுவனம் நஷ்டக் கணக்கு காட்டி, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சட்டப் பலன்களை தர மறுத்துக் கொண்டிருக்கிறது. தற்போது டாஸ்மாக் கடைகளை மூடுகின்ற ஏற்பாடாக, 581 மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மனமகிழ் மன்றங்களில், உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் ஆனால் நிபந்தனைகளுக்கு மாறாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடிய மது வகைகள் டாஸ்மாக்கில் கிடைப்பதில்லை ஆனால் இது போன்ற மனமகிழ் மன்றங்களில் கிடைக்கிறது.  திட்டமிட்டு அரசுக்கு வர வேண்டிய வருவாயை, தனியார் ஆதிக்கத்திற்கு செல்லும் ஏற்பாட்டை இந்த அரசு செய்துள்ளது. இந்த செயல்பாடுகள் டாஸ்மாக்கை ஒட்டுமொத்தமாக மூடும் நிலையை உருவாக்கும். அதுமட்டுமின்றி பணம் பெற்றுக்கொண்டு கடை ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தல், பணியில் அமர்த்துதல் உள்ளிட்ட மோசமான கலாச்சாரங்கள் டாஸ்மாக்கில் நிலவிவருகிறது." என்றார்.

மேலும், "கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களுக்கு பிறகு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கள்ளச்சாராயம் காட்சி விற்பவர்களை விட்டுவிட்டு சட்டத்திற்கு புறம்பாக மது விற்பவர்களை கைது செய்கிறோம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்கள். அவ்வாறு கைது செய்யப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் எங்கு மது வாங்கினார்களோ அந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் அரசு கொள்முதல் செய்யும் மதுவை தான் விற்பனை செய்கிறோம். ஆனால் காவல்துறையினர் சமூக விரோதிகளை விட்டுவிட்டு டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது வழக்கு போடுவது ஏற்புடையதல்ல. என்றார்.

எங்கள் கோரிக்கைகள் குறித்த அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். அமைச்சர் அதன் மீதுள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe